ADDED : மே 24, 2026 11:19 PM

- நமது நிருபர் -
ஒரு காலத்தில் ஆண்களால் மட்டுமே கனரக வாகனங்களை ஓட்ட முடியும் என்ற நிலையில், இப்போது பெண்களும் சர்வசாதாரணமாக ஓட்டுகின்றனர். குறிப்பாக, அதிக டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து வரும் லாரிகளை ஓட்டுவதில் பெண்கள் கைதேர்ந்து உள்ளனர். டிரைவிங் துறையில் சாதனை படைத்து வரும் கர்நாடகாவின் முதல் பெண் கனரக வாகன டிரைவரான செல்வியை பற்றி பார்க்கலாம்.
மைசூரை சேர்ந்தவர் செல்வி, 38. ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு பெற்றோர், 14 வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.
இவரது கணவர் குடிகாரராக இருந்ததால், தினமும் குடித்து விட்டு வந்து செல்வியை தொந்தரவு செய்து உள்ளார். வேறு ஒரு ஆணுடன் படுக்கை பகிரும்படி கூட, தொல்லை கொடுத்து இருக்கிறார். தனக்கு, 18 வயது ஆனதும் கணவரிடம் இருந்து தப்பித்த செல்வி, மைசூரு ஓடநாடி தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து உள்ளார்.
வாடகை கார் வாழ்க்கையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற பயம் அவரை சூழ்ந்து கொண்டது. அங்கு உள்ள பெண்கள் எவ்வளவோ தைரியம் அளித்தும், செல்வியால் எளிதில் மீண்டு வர முடியவில்லை.
ஆனாலும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க ஆசைப்பட்டார். ஓடநாடி தொண்டு நிறுவன உதவியுடன், கார் ஓட்டும் பயிற்சி வகுப்புக்கு சென்றார். பயிற்சியில் கைதேர்ந்த பின், செல்விக்கு, ஓடநாடி நிறுவனம் கார் வாங்கி கொடுத்தது. மைசூரு, பெங்களூரில் வாடகை கார் ஓட்டினார்.
கடந்த, 2004ல் இந்தியாவை சுற்றி பார்க்க வந்த, கனடாவை சேர்ந்த எலிசா பலோசுகி என்பவர் பயணித்த வாடகை காரை செல்வி ஓட்டினார்.
செல்வியை கடந்த கால துயர வாழ்க்கையை கேட்டு எலிசா வருத்தம் அடைந்தார். சுற்றுலா முடிந்து கனடா திரும்பிய எலிசா, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சுற்றுலா வந்த போது, செல்வியை சந்தித்து, அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை, 'டிரைவிங் வித் செல்வி' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்து, சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
விழிப்புணர்வு அதன் பின் தான், செல்வி இந்த உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தார். இதற்கிடையில், விஜி என்பவரை மறுமணம் செய்த செல்வி, கணவர் ஆதரவுடன் கனரக வாகனங்களையும் இயக்க ஆரம்பித்தார். இதன் மூலம், கர்நாடகாவில் கனரக வாகனம் இயக்கிய முதல் பெண் டிரைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
கனரக வாகனங்கள் ஓட்டுவதோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம், எலிசா பலோசுகியுடன் சேர்ந்து இந்தியா முழுதும் பயணம் செய்து, குழந்தை திருமணத்தால் ஏற்படும் கஷ்டம் குறித்து மக்களிடம் சொல்வதுடன், தனது வாழ்க்கை வரலாறு அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் சாதனை பெண்மணி என்ற விருது வழங்கியது.
இந்த விருதை, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் இருந்து, செல்வி வாங்கினார். பெண்கள் மனது வைத்தால் எதுவும் சாதிக்கலாம் என்பதற்கு, செல்வியின் வாழ்க்கை ஒரு உதாரணம்!
