ADDED : ஏப் 28, 2025 06:52 AM

வீட்டின் பொருளாதார சூழ்நிலையில், கணவருக்கு தோள் கொடுக்க நினைத்த பெண், கூரியர் பெண்ணாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, கனரக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் எடுத்து, அரசு பஸ் பணிக்காக காத்திருக்கிறார்.
மைசூரு நகரின் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஷில்பா ரவி, 37. கணவர் பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள். கணவரின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தார்.
சம்மதம்
ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி அதிகரித்தது. கணவரின் வேலை பளுவை குறைக்க ஷில்பா நினைத்தார்.
தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார். அவரும் மனைவியின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.
பி.யு.சி., மட்டுமே படித்துள்ள இவர், ஆறு மாதங்களுக்கு முன், உணவு டெலிவரி செய்யும் பணியில் சேர்ந்தார். தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை உணவு டெலிவரி செய்து வருகிறார்.
பணியில் இவரின் ஈடுபாட்டால், வாடிக்கையாளர்களும், ரெஸ்டாரென்ட் உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பெண்கள் இன்னும் சமமான நிலைக்காக போராடும் ஒரு சமூகத்தில், இன்று பல ஆயிரம் ரூபாய் கமிஷனாக சம்பாதிக்கிறார்.
இது குறித்து ஷில்பா கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன், பல குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்தோம்.
மற்றவர்களை சார்ந்து, என் சுயமரியாதையை பணயம் வைக்க விரும்பவில்ல. அதற்க பதிலாக நான் வேலை செய்து சுயமாக வாழ தேர்ந்தெடுத்தேன்.
துணிச்சல்
என் கடின உழைப்பு நல்ல பலன் கொடுத்தது. ஹோட்டல் உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் என் துணிச்சலை பாராட்டினர். என் வெற்றிக்கு என் குடும்பத்தினர் தான் காரணம்.
சில வீடுகளில், மனைவி வேலைக்கு செல்வது அவரது கணவர், மாமியாருக்கு பிடிக்காது. என் விஷயத்தில், என் கணவர், மாமியார் ஊக்கம் அளிக்கின்றனர்.
காலையில் பால் வினியோகிப்பதை கவனித்து கொள்ளும் என் கணவர், மதிய நேரத்தில் அவரும் உணவு டெலிவரி செய்பவராக பணியாற்றுகிறார். குழந்தைகளை மாமியார் கவனித்து கொள்கிறார்.
நகரில் போலீசாரின் ரோந்து பணியால், இரவிலும் கூட தைரியமாக என்னால் வெளியே சென்று உணவு வினியோகம் செய்ய முடிகிறது. என் கனவுகள் உணவு வினியோகம் செய்வதுடன் நின்றுவிடவில்லை.
கனரக ஒட்டுநர் உரிமம் பெற்றுள்ள நான், கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் ஓட்டுநர் பணிக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் பங்கேற்று, அதன் முடிவுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி பெற்றால், மைசூரில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெறுவார். ஷில்பாவின் முன்னேற்றம், நமக்கு நம்பிக்கை, கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
மன உறுதி, குடும்ப ஆதரவுடன் பெண்கள் எந்த துறையையும் வெல்ல முடியும் என்பதற்கு ஷில்பா சிறந்த உதாரணம்.
- நமது நிருபர் -

