ADDED : மே 17, 2026 11:20 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் அண்டை மாநிலமான கேரளாவின் கோழிக்கோட்டில், 'பேஷன் ரன்வே இன்ஸ்டிடியூட்' ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான அழகி போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் மங்களூரை சேர்ந்த லளக்யா எஸ்.ராய் 6 முதல் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் எஸ்.ஆர்.டாட் ஜே.எம்.ஐ., இந்தியா பட்டத்தையும்; 10 முதல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சச்சிதா ராவ், மிஸ் ப்ரீடீன் ஜே.எம்.ஐ., இந்தியா பட்டத்தையும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடக்க இருக்கும், உலக தரம் வாய்ந்த அழகி போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்.
லளக்யா எஸ்.ராயும், சச்சிதா ராவும் மங்களூரில் உள்ள எஸ்.டி.எம்., பள்ளி மாணவியர். லளக்யா ஒன்றாம் வகுப்பும், சச்சிதா 6ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்கள் வெற்றிக்கு பின் முக்கியமான நபராக யஷஸ்வினி தேவகிதா உள்ளார். அழகி போட்டியில் பங்கேற்கும் போது, திறமையை எப்படி வெளிப்படுத்த வேண்டும்; பார்வையாளர்கள் முன்பு எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்;
நேர்காணல் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டங்களாக நடக்கும் போட்டியில் ஜொலிப்பது எப்படி என இரு சிறுமியருக்கும் சொல்லி கொடுத்தவர் யஷஸ்வினி தான்.
பாங்காக்கில் நடக்கும் சர்வதேச போட்டியில் மலேஷியா, துருக்கி, அர்மேனியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தோர் பங்கேற்க உள்ள நிலையில், லளக்யா எஸ்.ராயும், சச்சிதாவும் கலந்து கொள்ள இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
