ADDED : மே 11, 2026 02:41 AM

- நமது நிருபர் -:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் தாஷ்மா சேத்தன், 36. எம்.பி.ஏ., படித்தவர். இவரது கணவர் யோகேஷ், தொழிலதிபர். தாஷ்மாவுக்கு சிறு வயதிலிருந்தே 'மாடலிங்' துறையில் ஆர்வம் அதிகம். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கு இவரது கணவர் யோகேஷ் முழு ஆதரவு தெரிவித்து வந்தார்.
மாடலிங் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளை தாஷ்மா தேடி வந்தார். இவரது உழைப்பின் மூலம் சிறிய அளவிலான மாடலிங் போட்டியில் பங்கேற்றார். இதில், பரிசுகளையும் பெற்றார். பெரிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
உற்சாகம் மங்களூரில், 2025ல் நடந்த, 'மிசஸ் இந்தியா கர்நாடகா 2025' அழகி போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தினார். இது, அவருக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்தது.
இதையடுத்து, சிரமம் மிகுந்த சினிமா துறையில் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆல்பம் பாடல்களில் கதாநாயகியாக நடித்தார். இந்த பாடல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், மன உறுதியுடன் வெள்ளித்திரையில் கால் பதிக்க முயன்றார்.
அதே சமயம், 2025ல் டில்லியில் நடந்த, 'மிசஸ் இந்தியா எர்த் 2025' போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான அழகிகள் பங்கேற்றனர். இதில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.
சமீபத்தில், பெங்களூரில் நடந்த 'பேஸ் ஆப் தி வோர்ல்ட் 2026' அழகி போட்டியில் பங்கேற்றார். இதில், பல நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் 'மிசஸ்' பிரிவில் முதலிடம் பிடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த வெற்றியை சுவைத்த பின், அவர் கூறியதாவது:
என் வெற்றியின் பின்னணியில் என் கணவர் உள்ளார். என்னுடைய மாமியார், 92 வயதிலும் சுறுசுறுப்பாக உள்ளார். அவர் மொபைல் போன் உபயோகம் போன்ற டிஜிட்டல் விஷயங்களையும் கற்று வருகிறார். இதெல்லாம் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கிறது. இதனால் தான், என்னால் சாதிக்க முடிந்தது. பெண்கள் தங்கள் கனவுகளுக்காக போராட வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர், 'பேட் நைட்' என்ற கன்னட மொழி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இது, அவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளது!
