எண்ணெய் உற்பத்தியில் தொழில் முனைவோர் ஆன மேகா ரஜினி
எண்ணெய் உற்பத்தியில் தொழில் முனைவோர் ஆன மேகா ரஜினி
ADDED : மார் 09, 2026 06:04 AM

- நமது நிருபர் -
கனிம சுரங்க மாவட்டம் என பெயர் எடுத்துள்ள, பல்லாரி விவசாயத்திற்கும் பெயர் பெற்றது. விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், எண்ணெய் உற் பத்தியில், தொழில்முனைவோராக மாறி சாதனை படைத்து உள்ளார்.
பல்லாரியின் ராம்தேவரா முகாமில் வசிப்பவர் மேகா ரஜினி, 48. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு, விவசாயத்தை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு தொழில் மூலம், தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. உறவினர்கள், தெரிந்தவர்களிடம் ஐடியா கேட்ட போது, சரியான பதில் கிடைக்கவில்லை.
ஒரு நாள் யு - டியூப் பார்த்த போது, பெண்கள் சுயதொழில் செய்ய என்னென்ன வழி உள்ளது என்ற வீடியோவை பார்த்தார். பின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ், சுயசார்பு தொழில் செய்ய விண்ணப்பித்தார். வங்கியில் இருந்து 3.85 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இந்த பணத்தில் வீட்டில் எண்ணெய் ஆலை அமைத்து, இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தினார்.
வீட்டிலேயே நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி, குங்குமப்பூ, எள் எண்ணெய் தயாரிக்கிறார். மாதத்திற்கு கடலை எண்ணெய் 250 லிட்டர், தேங்காய் எண்ணெய் 30 லிட்டர், மற்ற எண்ணெய்கள் தலா 50 லிட்டர் தயாரித்து விற்பனை செய்கிறார்.
எண்ணெய் தயாரிக்க தாவணகெரே, துமகூரு, விஜயாபுராவில் இருந்து தேங்காய், நிலக்கடலை, குங்குமப்பூ வாங்குகிறார்.
தொழில் துவங்கிய ஒன்பது மாதங்களில், விற்பனையில் கொடிகட்டி பறக்கிறார். வீட்டில் தயாரிக்கும் எண்ணெய்களை தற்போது கடைகள், சந்தைகளில் விற்பனை செய்கிறார். வரும் நாட்களில் பிளிப்கார்ட், அமேசான், பிளிங்கிட் போன்ற நிறுவனங்கள் மூலம், ஆன்லைனிலும் எண்ணெய் விற்பனை செய்ய தயாராகி வருகிறார்.
பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ், சுயதொழில் செய்ய கடன் வாங்கினால் மத்திய அரசு 35 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம் மானியம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
