ஆடவள் அரங்கம்: யக்ஷகானாவில் நிகழ்ச்சியில் சாதிக்கும் அர்பியா கான்
ஆடவள் அரங்கம்: யக்ஷகானாவில் நிகழ்ச்சியில் சாதிக்கும் அர்பியா கான்
UPDATED : அக் 26, 2026 12:03 AM
ADDED : அக் 25, 2026 07:54 PM

- நமது நிருபர் -: கலை ஆர்வத்துக்கு, மதத்தால் வேலி போட முடியாது என்பதை, முஸ்லிம் சமுதாயத்தின் அர்பியா கான் நிருபித்துள்ளார். யக்ஷகானாவில் மஹிஷாசுரமர்த்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
தட்சிண கன்னட மாவட்டம், பண்ட்வால் தாலுகாவின், விட்லாவை சேர்ந்தவர் அர்பியா கான், 33. இவருக்கு கலை ஆர்வம் அதிகம். விட்லா அருகில், 'ஸ்ரீதேவி மஹாத்மே' யக்ஷகானா நிகழ்ச்சி நடந்தது. அதை பார்த்த பின், அர்பியா கானுக்கு யக்ஷகானாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதற்காக தன்னை தயார்ப்படுத்தினார். 'தனு விட்லா' என்ற பெயரில், யக்ஷகானா குழுவில் சேர்ந்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, ஹிந்து கடவுள் கதாபாத்திரங்களை ஏற்று,s தன் திறமையை காட்டுகிறார்.
நிஷும்பாசுரா, ரக்தபீஜாசுரா, மஹிசாசுரா உட்பட, பல முக்கியமான கதாபாத்திரங்களில், உயிரோட்டமாக நடித்துள்ளார். கலைக்குழுவுடன் தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் என, பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன், தசராவை முன்னிட்டு மங்களூரின், வரலாற்று பிரசித்தி பெற்ற மஞ்சுநாதசுவாமி கலையரங்கத்தில், யக்ஷகானா நிகழ்ச்சி நடந்தது.
இதில் அர்பியா, மஹிஷாசுரமர்த்தினியாக அற்புதமாக நடித்துள்ளார். இதற்காக அவர் ஆறு மாதமாக பக்தியுடன் விரதம் அனுஷ்டித்துள்ளார். அசைவ உணவை தவிர்த்துள்ளார். கோவில்களுக்கு சென்று பூஜித்துள்ளார். முதல் முறையாக அம்பாள் கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் அற்புதமாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார்.
அர்பியா கான் கூறியதாவது:
கத்ரி கோவிலின், கலையரங்கத்தில் நடந்த யக்ஷகானாவில், மஹிஷாசுரமர்த்தினியாக தோன்றியது, எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம், என் கனவு நனவானது. பல ஆண்டுகள் என் உழைப்புக்கு நற்பலன் கிடைத்துள்ளது. யக்ஷகானாவில் அனைத்தையும் சாதித்த மனதிருப்தி எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
