/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
வயசோ ஒன்று கூட ஆகலை... சாதனையோ ஏராளம்
/
வயசோ ஒன்று கூட ஆகலை... சாதனையோ ஏராளம்
UPDATED : மார் 06, 2025 01:28 PM
ADDED : மார் 06, 2025 01:23 PM

பொதுவாக, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் விரைவில் பேசி விடும். சுட்டித்தனம் நிறைய செய்யும். சேட்டையும் அதிகமாக இருக்கும். ஆனால், இன்னும் 1 வயது கூட நிரம்பாத குழந்தை, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
விஜயபுரா டவுனில் வசிக்கும் தீபக் - அனுஷா தம்பதியின் 9 மாத மகள் ஐரா. இன்னும் சரியாக எழுந்து கூட நடக்கவில்லை. ஆனால், சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். அதாவது 422 வார்த்தைகளை படபடவென சொல்கிறார். ஐராவுக்கு வீடு தான் பள்ளி; அம்மா அனுஷா தான் ஆசிரியை. தொழிலிலும் அவர் ஆசிரியை தான்.
ஐரா, 24 பழங்கள்; வீட்டில் வளர்க்கும் 20 செல்லபிராணிகள்; 24 உடல் பாகங்கள்; 24 காய்கறிகள்; 25 பறவைகள்; 11 வண்ணங்கள்; 26 ஆங்கில எழுத்துக்கள்; 24 எண்கள்; 48 நாடுகளின் கொடிகள்; 28 சுதந்திர போராட்ட வீரர்கள்; 24 மலர்கள்; 12 பிரபலமான இடங்கள்; 12 சமூக பணியாளர்கள்; 24 வனவிலங்குகள் படத்தை சரியாக கூறி வருகிறார்.
இவரது செயல்பாடுகளை பார்த்த பெற்றோர், மகளின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவரது செயல்பாடுகளை பதிவு செய்து நோபல் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பினர். அவர்களும் குழந்தையின் திறமையை சோதித்து பார்த்தனர். சிறப்பாக கூறியதால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி விருது வழங்கி பாராட்டினர்.
இந்நிலையில் மகளின் சாதனை குறித்து தீபக், முதல்வர் சித்தராமையாவுக்கு மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைத்து இருந்தார். அந்த மின்னஞ்சலை கவனித்த முதல்வர், குழந்தையையும், பெற்றோரையும் நேரில் வரவழைத்து பாராட்டினார். விஜயபுரா கலெக்டர் பூபாலனும் குழந்தையை பாராட்டி கவுரவித்தார்.
இதுகுறித்து அனுஷா கூறுகையில், ''எனது மகள் பிறந்த சில வாரங்களில் அவருக்கு ஏதோ சிறப்பு திறமை இருப்பதாக தோன்றியது.
''அவரது புத்திசாலித்தனம், நினைவாற்றல், புரிந்து கொள்ளும் திறன்களை உணர்ந்து அவருக்கு 422 பொருட்களை அடையாளம் காண்பித்து சொல்லி கொடுத்தேன். அவரும் கற்று கொண்டார்.
''தற்போது அவருக்கு விருது கிடைத்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ஒரு வயது ஆகும் போது 700 வகையான பொருட்களை அடையாளம் காண்பார்,'' என்றார்.

