/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பாம்புகளை லாவகமாக பிடிக்கும் 'ரீல்ஸ்' பிரபலம் பிரியா சவதி
/
பாம்புகளை லாவகமாக பிடிக்கும் 'ரீல்ஸ்' பிரபலம் பிரியா சவதி
பாம்புகளை லாவகமாக பிடிக்கும் 'ரீல்ஸ்' பிரபலம் பிரியா சவதி
பாம்புகளை லாவகமாக பிடிக்கும் 'ரீல்ஸ்' பிரபலம் பிரியா சவதி
ADDED : ஜூலை 28, 2025 03:30 AM

பாம்பு என்றால் படையை நடுங்கும் என்று பழமொழி உண்டு. விஷத்தன்மை, அது ஏற்படுத்தும் அச்சம் காரணமாக பாம்பை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர். நாகபாம்பு, கட்டுவிரியன் பாம்புகள் ரொம்ப ஆபத்தானவை.
அந்த பாம்புகள் கொத்தி, விஷம் உடலில் ஏறினால் மனித உயிருக்கு ஆபத்து தான். வளைந்து, நெளிந்து செல்லும் பாம்புகளை எல்லோராலும் எளிதில் பிடித்து விட முடியாது. பாம்புகளை பிடிப்பதற்கு என்றே 'பாம்பு பிடி வீரர்'கள் உள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் குச்சியை வைத்து எளிதில் பிடித்து விடுவர். பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர்கள் இறந்த உதாரணமும் உண்டு.
பெண் அதிகாரி தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும், சர்வ சாதாரணமாக பாம்புகளை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். சமீபத்தில் கேரளாவை சேர்ந்த வன அதிகாரி ஒருவர், ராஜநாகத்தை நேருக்கு நேர் பிடித்து அசத்தினார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த அதிகாரியின் தைரியத்திற்கு பாராட்டு கிடைத்தது. இதுபோல கர்நாடகாவை சேர்ந்த பெண் ரீல்ஸ் பிரபலம் ஒருவரும் பாம்புகளை லாவகமாக பிடிக்கிறார்.
பெலகாவியை சேர்ந்தவர் பிரியா சவதி. 'ரீல்ஸ்' பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவது மட்டுமே இவரது வேலை இல்லை. யார் வீட்டிற்குள்ளாவது பாம்பு புகுந்ததால், அதை பிடிக்கும் பணியையும் செய்கிறார்.
வெளியேற வழி இதுகுறித்து பிரியா சவதி கூறியதாவது:
என் தந்தை சந்திரசேகர். விவசாயியான இவருக்கு பாம்பு, தேள்களை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பாம்பு பிடிக்க அவர் கற்று கொண்டார். எந்த சூழ்நிலையிலும் பாம்பை அடித்து கொல்ல கூடாது என்று நினைப்பவர். அவரிடம் இருந்து தான் நானும், என் சகோதரி பிரீத்தியும் பாம்பு பிடிக்க கற்று கொண்டோம்.
யாரையும் கொல்லும் நோக்கில், பாம்பு கொத்தாது. அதற்கு ஏதாவது தொந்தரவு செய்தால் தான் கொத்தி விடுகிறது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பை அடிக்காமல், அது வெளியே செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தால் அமைதியாக சென்று விடும்.
பெலகாவி மாவட்டத்தின் அனைத்து ஊர்களுக்கும் சென்று வீடுகள், வயல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தோட்டங்கள், கோவில்கள், கிணறுகள், ஏரிகள், பள்ளி, கல்லுாரிகள் என பல இடங்களில் பாம்பு பிடித்து உள்ளேன். எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளில் 5,000 பாம்புகளை பிடித்து இருப்பேன்.
பணத்திற்கு இல்லை நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, முதன்முதலில் நாகபாம்பை பிடித்தேன். அன்றில் இருந்து தற்போது வரை பணி தொடர்கிறது. வீடுகளில் புகுந்து விடும் பாம்பை பிடித்த பின், வீட்டின் உரிமையாளர்கள் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்கின்றனர். நான் பணத்திற்காக பாம்பு பிடிக்கவில்லை. பாம்பு துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கம்.
பாம்பை பிடிக்க தைரியம் வேண்டும். பெரும்பாலான பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல. பாம்பு கடித்தால் முதலில் அது என்ன இனம் என்பதை அறிய வேண்டும். பாம்பை வில்லனாக மக்கள் கருதுகின்றனர். இது தவறான முன்னுதாரணம். சிலர் மூடநம்பிக்கை காரணமாக பாம்புகளை கொல்கின்றனர். இதுவும் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -