உடல் ஊனம் பற்றி கவலைப்படாமல் சாதிக்கும் பெங்களூரு பெண் சவிதா
உடல் ஊனம் பற்றி கவலைப்படாமல் சாதிக்கும் பெங்களூரு பெண் சவிதா
ADDED : ஏப் 06, 2026 04:37 AM

- நமது நிருபர் -
பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், மனதில் ஓடி கொண்டே இருக்கும். தங்கள் உடல் ஊனத்தை ஒரு குறைபாடாக கருதாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பர்.
இவர்களில் ஒருவராக பெங்களூரின் டி.தாசரஹள்ளியில் வசிக்கும் சவிதா உள்ளார். விபத்தில் சிக்கி முதுகு தண்டு உடைந்ததால், இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல்படாமல் போனது. மகனை காப்பாற்றுவதற்காக வீல் சேரில் சென்று, உணவு டெலிவரி செய்கிறார்.
தற்கொலை முயற்சி தனது வாழ்க்கை பயணம் குறித்து சவிதா கூறியதாவது:
பிறவிலேயே நான் ஊனத்துடன் பிறக்கவில்லை. எனக்கு திருமணமாகி விட்டது. ஒரு மகன் உள்ளார். 2019ம் ஆண்டு நடந்த விபத்தில், எனது முதுகு தண்டு உடைந்ததால், இடுப்பிற்கு கீழ் உள்ள பாகங்கள் வேலை செய்யாமல் போனது.
பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். வீல் சேரில் வீட்டிற்குள்ளேயே சுற்றி வந்தேன். நான்கு சுவருக்குள் அடைந்து இருந்தது, எனக்கு மன அழுத்தம் கொடுத்தது. இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன்; குடும்பத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர்.
இன்னொரு முறையும் விபத்தில் சிக்கி, எனது தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனது கணவரும், குடும்பத்தினரும் மருத்துவமனையில் என்னை அப்படியே விட்டு சென்றனர். இவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
டிஸ்சார்ஜ் ஆனதும் வாடகைக்கு வீடு தேடினேன்.
வீடு கிடைத்ததும் நானும், மகனும் அங்கு குடியேறினோம். வாழ பணம் தேவை என்பதால், ஏதாவது வேலைக்கு செல்ல நினைத்தேன்.
சொமோட்டாவில் உணவு விற்பனை பிரதிநிதி வேலை கிடைத்தது. அவர்களே எனக்கு வீல் சேருடன் இணைக்கும் வகையில், பைக் போன்று தோற்றமளிக்கும் மோட்டார் வாங்கி கொடுத்தனர்.
களிமண் சிலை ஸ்கூட்டர் போன்று இருக்கும் வாகனத்தில் சென்று, வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகித்து வருகிறேன். எனக்கும், யு - டியூபர் ஸ்ரீதேவி என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
அன்றாடம் உங்கள் வீட்டில் நீங்கள் செய்வதை, வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடலாமே என்று ஐடியா கொடுத்தார். இதன்பேரில் சவிதா சவி கன்னடா என்ற பெயரில், யு - டியூப் சேனல் ஆரம்பித்து, எனது அன்றாட பணிகளை வீடியோவாக பதிவிடுகிறேன். நிறைய பேர் லைக் செய்கின்றனர்.
ஊக்கமளிக்கும் வகையில் பேசுகின்றனர்.
களிமண்ணில் கலைநயம் செய்வது எனக்கு பிடிக்கும். இதற்கு தேவையான பொருட்கள் சிக்பேட்டில் கிடைக்கிறது. என்னிடம் இருந்து ஸ்கூட்டர் வாகனத்தை வைத்து நீண்ட துாரம் போக முடியும். பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு, எனது வாகனம் கண்ணுக்கே தெரியாது.
இதனால் வீட்டில் இருந்து டி.தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சிக்பேட் செல்கிறேன்.
தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன். என் மகனை தவிர எனக்கு யாரும் இல்லை. சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும், எனது மகனிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவரை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
