பெண்ணை தொழில் முனைவோராக்கிய 'குல்லடகி உண்டி' இனிப்பு விற்பனை
பெண்ணை தொழில் முனைவோராக்கிய 'குல்லடகி உண்டி' இனிப்பு விற்பனை
ADDED : ஏப் 20, 2026 02:10 AM

-நமது நிருபர் -
'குல்லடகி உண்டி' இனிப்பு வகை கர்நாடகாவின் வடமாவட்டங்களில் பிரபலமானது. இந்த இனிப்பை விற்பனை செய்து ஷில்பா என்ற பெண் தொழில் முனைவோராக மாறி உள்ளார்.
இதுகுறித்து ஷில்பா கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே இனிப்பு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவேன். அதிலும் கர்நாடகாவின் வடமாவட்டங்களில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் குல்லடகி உண்டி இனிப்பு என்றால் எனக்கு கொள்ளை பிரியம்.
திருமணத்திற்கு பின், எந்த வேலையும் இன்றி வீட்டில் இருந்தேன். கணவரின் வருமானத்தை மட்டும் நம்பியே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தை நிர்வகிக்கவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும் ஏதாவது வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.
சில இடங்களில் வேலைக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை. சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்த போது தான், குல்லடகி உண்டி இனிப்பு தயார் செய்து விற்கலாம் என்று எண்ணம் தோன்றியது.
குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறிய போது இது எல்லாம் உனக்கு சரிபட்டு வருமா என்று கேட்டனர். ஆனால் எனது கணவர் ஆதரவு அளித்தார். குல்லடகி உண்டி செய்வதற்காக சில கிராமங்களுக்கு சென்று, பெண்களிடம் பயிற்சி பெற்றேன்.
தனியார் பயிற்சி மையத்திற்கும் சென்று பயிற்சி செய்து, இனிப்பு செய்வதில் கை தேர்ந்த பின், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலேயே இனிப்பு செய்ய ஆரம்பித்தேன். முதலில் வீட்டின் அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்தேன். சுவை நன்றாக உள்ளது என்று கடைக்காரர்கள் கூறினர். தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி எனக்கு தொழில் விருத்தி அடைய உதவி செய்தனர்.
முதலில் மாதத்திற்கு 40 கிலோ குல்லடகி உண்டி இனிப்புகள் விற்றேன். இப்போது 400 கிலோ வரை விற்கிறேன். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கதக், ஹாவேரி, தார்வாட், பெங்களூருக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறேன்.
கதக்கின் ஹுலகோட்டியில் உள்ள வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள், குல்லடகி உண்டியை இணைய வழியில் விற்பனை செய்ய, சந்தை அமைத்து தருவதாக உறுதி அளித்து உள்ளனர். தன்னிறைவு வாழ்க்கை வாழ்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் ஏதாவது ஒரு கை தொழிலை கற்று கொண்டு அதன் மூலம் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பது எனது கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
