ADDED : ஏப் 26, 2026 11:41 PM

- நமது நிருபர்-
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட் தாலுகா ஜகனகோட்டை கிராமத்தில் வசிப்பவர் ராகினி. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், தன் சமூகத்தை சேர்ந்த பெண்கள், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதையை காட்டுகிறார். கடலை மிட்டாய் செய்யச் சொல்லி கொடுத்து தொழில் முனைவோராக மாற்றி வருகிறார்.
இதுகுறித்து ராகினி கூறியதாவது:
நான் பெட்டகுருபா என்ற பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவள். அப்பா, அம்மா கூலி வேலை செய்தனர். ஏழாம் வகுப்பு வரையே என்னால் படிக்க முடிந்தது. அதற்கு மேல் குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியவில்லை. எனக்கு, 17 வயதில் திருமணம் நடந்து விட்டது.
கணவரும் கூலி வேலை செய்தார். அவருக்கு சொற்ப சம்பளமே கிடைத்ததால், குடும்பத்தை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. படிப்பும் இல்லை; பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி உள்ளோமே என்ற மன உளைச்சல் ஏற்பட்டது. சொந்தமாக ஏதாவது தொழில் துவங்கலாம் என்று நினைத்த போது, தனியார் அமைப்பு சார்பில், ராகி உருண்டை, ராகி அப்பளம் செய்ய பயிற்சி அளித்தனர்.
அங்கு சென்று பயிற்சியில் பங்கேற்றேன். கடலை மிட்டாய் செய்வது எப்படி என்று தெரிந்த பின், மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி, கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையை சிறியதாக துவங்கினேன். நான் சார்ந்த சமூகத்தின் பெண்கள் வேலையின்றி கஷ்டப்படுவது எனக்கு தெரியும்.
அவர்கள் வாழ்க்கை தரத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று நினைத்து, என் தொழிற்சாலையில் அவர்களுக்கு வேலை கொடுத்ததுடன், பயிற்சியும் அளித்தேன். தற்போது என்னிடம், ஐந்து பெண்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு வாழ்க்கையில் எப்படி முன்னேறி செல்ல வேண்டும் என்ற, பாதையை காட்டி உள்ளேன். அவர்களும் எதிர்காலத்தில் தொழில்முனைவோராகி விடுவர் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்.
