/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
5,000 பாம்புகளை பிடித்து சகோதரியர் சாதனை
/
5,000 பாம்புகளை பிடித்து சகோதரியர் சாதனை
ADDED : ஏப் 14, 2025 05:43 AM

பாம்பு என்றால், படையும் நடுங்கும் என்பது பழமொழி. எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும், பாம்பை கண்டால் அலறி ஓடாமல் இருக்க மாட்டார். ஆனால் பெலகாவியில் இளம் பெண்ணொருவர் பாம்பை உடலில் சுற்றி கொண்டு, குழந்தை போன்று கொஞ்சுகிறார்.
பெலகாவி நகரில் வசிப்பவர் சந்திரசேகரய்யா சவதி. இவருக்கு பிரியா, 26, பிரீத்தி, 24, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பொதுவாக பாம்புகளை கண்டால், காத துாரம் ஓடுவோரே அதிகம். அவற்றை பார்த்தவுடன் அடித்து கொல்ல முயற்சிப்பர். ஆனால் சந்திரசேகரய்யா குடும்பத்தினருக்கு செல்ல பிள்ளை போன்றதாகும். பாம்புகள் மீது அலாதி அன்பு காட்டுகின்றனர்.
விளையாட்டு
பிரியா சவதி பிரபலமான யு டியூபர். இவரும், இவரது சகோதரி பிரீத்தியும் பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள். சுற்றுப்பகுதிகளில் எங்கு பாம்பு புகுந்தாலும், அங்குள்ள மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரியா, பிரீத்தி சகோதரிகள் தான். ஆண்களே பாம்பை பார்த்து அஞ்சி நடுங்குவர். ஆனால் சகோதரியர், பயமின்றி குழந்தையை துாக்குவது போன்று பாம்பை துாக்கி விளையாடுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
நாகப்பாம்பு, கட்டு வீரியன், மலைப்பாம்பு, சாரைப்பாம்பு என எந்த பாம்புக்கும் இவர்கள் பயப்படுவது இல்லை. பிடித்து சென்று பாதுகாப்பாக வனத்தில் விடுவர். இந்த விஷயத்தில் பிரீத்தி, அதிக ஆர்வம் உள்ளவர். சில நாட்களுக்கு முன், பெலகாவி நகரின், சாஹித்ய பவன் பின் பகுதியில் வசிக்கும் சித்தராம் போகூர் என்பவரின் வீட்டுக்குள், சாரை பாம்பு புகுந்தது. இதை பார்த்து அவர், உடனடியாக பிரீத்திக்கு தகவல் கொடுத்தார்.
கட்டணம் இல்லை
அங்கு வந்த பிரீத்தி, சமையலறைக்குள் புகுந்திருந்த பாம்பை பிடித்தார். பிளாஸ்டிக் கேனில் பாம்பை போட்டு, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். சில நேரங்களில் சந்திரசேகரய்யா, தன் மகள்களுடன் பாம்பு பிடிக்க செல்கிறார். இதற்காக இவர்கள், எந்த கட்டணமும் பெறுவதில்லை. இதை ஒரு சேவையாக கருதி செய்கின்றனர்.
பாம்பு பிடிப்பது மட்டுமல்ல, அவற்றின் குணாதிசயங்கள், எப்படி தற்காத்து கொள்வது, வீட்டுக்குள் புகுந்தால் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். சகோதரியர் இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து பாராட்டுகின்றனர்.
பெண்கள் என்றால் பயந்தாக்கொள்ளிகள் என, கிண்டல் அடித்த காலம் போய்விட்டது. பிரியா, பிரீத்தி போன்ற பெண்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றனர்.
- நமது அரங்கம் -

