ADDED : ஏப் 26, 2026 11:43 PM
- நமது நிருபர் -:
அரசு, தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் நலனுக்காக, 'கர்நாடகா மாதவிடாய் விடுப்பு கொள்கை - 2025' வகுக்கப்பட்டது. இந்த கொள்கைக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை, கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் வழங்கியது.
இந்த கொள்கை, அரசு, தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதை உறுதி செய்தது. 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஆண்டுக்கு 12 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுக்கலாம். விடுப்பு எடுப்பதற்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என கூறப்பட்டிருந்தது.
ஆவணம் தேவையில்லை இதற்கு நாடு முழுதும் வரவேற்பு கிடைத்தது. கொள்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை அனைத்து தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதே சமயம், இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம், மேனேஜ்மென்ட் ஆப் அவிராடா ஏ.எப்.எல்., கனெக்டிவிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட் உள்ளிட்ட அமைப்புகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதேபோன்று, அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கவுன்சில், அகில இந்திய ஜனநாய மகளிர் சங்கம் போன்ற அமைப்புகள் மாநில அரசுக்கு ஆதரவாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
நீதிபதியின் தீர்ப்பு இப்படி கடந்த சில மாதங்களாக கோர்ட்டிலேயே இந்த கொள்கை சிக்கி தவித்தது. இதனால், கொள்கையை அமல்படுத்த முடியாமல் மாநில அரசு திணறியது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் மனுக்களின் மீதான விசாரணை நடந்தது.
'அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்' என, அவர் தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பெண்கள் நலனுக்காக, அரசு பல கொள்கைகள் கொண்டு வந்தாலும், பெண்கள் நேரடியாக பலனை அனுபவிக்கும் இதுபோன்ற கொள்கைகள் போற்றத்தக்கவை. கர்நாடகா மாதவிடாய் கொள்கை 2025 முழுமையாக அமலாகும் போது, முதல்வர் சித்தராமையாவின் மீதான மதிப்பு மேலும் கூடும்.
பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவியர் பயனடையும் வகையில், மாதவிடாய் கொள்கையை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாதவிடாய் விடுப்பு கொள்கையில் திருத்தம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், மாணவியரும் ஆண்டுக்கு 12 முறை விடுப்பு எடுத்து கொள்ளலாம்.
l அக்டோபர் - 9, 2025 மாதவிடாய் விடுப்பு கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
l நவம்பர் - 20, 2025 கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உத்தரவு வெளியீடு
l ஏப்ரல் - 15, 2025 மாதவிடாய் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பு
