ADDED : மே 24, 2026 11:23 PM

பெங்களூரில் வசிக்கும் ஒரு பெண், தன் வீட்டருகில் பெருக்கி, குப்பையை அள்ளும் துப்புரவு தொழிலாளர்களை, மிகவும் அன்போடு நடத்துகிறார். தினமும் காபி, டீ, பிரட், பிஸ்கட், வாழைப்பழம் கொடுக்கிறார்.
இன்று, நேற்று அல்ல கடந்த பத்து ஆண்டுகளாக, இதை சேவையாக செய்கிறார். தினமும் காலை துப்புரவு தொழிலாளர்களை உபசரிக்க, மறந்ததே இல்லை.
துப்புரவு தொழிலாளர்களை மட்டுமின்றி, தன் வீட்டு வாசலுக்கு வரும் காய்கறி வியாபாரிகள், பூ விற்போரையும் தன் சொந்த உறுப்பினரை போன்று, அன்புடன் நடத்துகிறார். தெரு நாய்கள், பூனைகளுக்கு தினமும் பால், உணவு கொடுக்கிறார். தன் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தீவனம், குடிநீர் வசதியை செய்துள்ளார்.
இவரது தன்னலமற்ற சேவையை கண்டு, இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெகதீஷ் நடஹள்ளி என்பவர் வியப்படைந்தார்.
துப்புரவு தொழிலாளர்களை பெண் உபசரிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிறகே, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பலரும் பெண்ணை புகழ்ந்துள்ளனர்.
ஜெகதீஷ் நடஹள்ளி கூறியதாவது:
தினமும் தவறாமல் மற்றவருக்கு உதவும் மனம் உள்ள பெண்ணை, இதுவரை நான் பார்த்ததே இல்லை. எந்த பலனும் எதிர்பார்க்காமல், சேவை செய்யும் இவர் தாய் போன்றவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
