ADDED : மார் 02, 2026 05:09 AM

கணவருக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருக்க, தனக்கு தெரியாத தொழிலில் நுழைந்து, இன்று பெங்களூரை சேர்ந்த பெண் சாதித்து உள்ளார்.
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் மோனிகா, 37. சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்தவர். இந்த கஷ்டங்களை தனக்கான வெற்றி படிக்கட்டாக மாற்றிக் கொண்டார். நன்றாக படித்த மோனிகா, பி.காம்., பட்டப்படிப்பை முடித்தார்.
திருமணத்துக்கு பின், பெங்களூருக்கு குடியேறிய அவர், கணவரின் ஆதரவதால், எம்.காம்., முதுகலை பட்டம் பெற்றார். முன்னணி வங்கி ஒன்றில் அவருக்கு பணி கிடைத்தது. ஆனாலும், அவருக்கு பொருளாதார ரீதியில் தன் குடும்பமும், குறிப்பாக கணவரும் முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அதை செய்தும் காட்டி உள்ளார்.
தன் வெற்றி பயணம் குறித்து மோனிகா கூறியதாவது:
என் கணவரின் நிலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக, 2018ல் அவரின் காரேஜ் அருகிலேயே, 'ஷெல் நிறுவனத்தின்' ரீடெய்ல் ஆட்டோமொபைல் கடையை திறந்தேன். இதில் எனக்கு, 'அ... ஆவென்னா...' கூட தெரியாது. என் கணவர் தான் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார்.
இந்த தொழில் எனக்கு பிடித்துப் போனதால், விரைவில் அனைத்தையும் கற்று தெரிந்து கொண்டேன். தொழிலிலும் நல்ல வருவாய் கிடைக்க துவங்கியது. வங்கியில் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்தை விட, இந்த கடை மூலம் 70 சதவீதம் அதிகமாகவே வருவாய் ஈட்டினோம். அதுவும் மூன்று ஆண்டுகளே நீடித்தது. அதன்பின் கொரோனா தாக்கம் எங்களை முடக்கியது. புதிய வீட்டுக்காக வாங்கிய வங்கி கடன் மாதந்தோறும், 25,௦௦௦ ரூபாய்; கடை வாடகையாக, 16,௦௦௦ ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.
அப்போதும், 'ஷெல்' நிறுவனம் எங்களுக்கு உதவியது. வாரந்தோறும் அந்த நிறுவனத்தில் வினியோகஸ்தர் கடைக்கு வந்து, பணத்தை வாங்கிச் செல்வர். 'லாக்டவுன்' காரணமாக, பணத்தை வாங்கும் பணியை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.
இதனால், எங்களின் பொருளாதாரம் ஓரளவு ஈடுகொடுத்தது. லாக் டவுனின் போது, குடும்பத்தை நிர்வகிக்க, முடிந்தது.
தற்போது குடும்பத்துக்கு நிலையான வருவாய் வரத் துவங்கி உள்ளது. வரும் நாட்களில் வேறு இடத்தில் கிளை துவக்க உள்ளேன்.
அப்போது வருவாய் அதிகரிக்கும். அந்நேரத்தில் என் கணவர் மெக்கானிக் பணியை, எந்தவித அச்சமும் இன்றி விட்டு விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:
