/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பிச்சை எடுப்பதை விட்டு காய்கறி வியாபாரியான திருநங்கை
/
பிச்சை எடுப்பதை விட்டு காய்கறி வியாபாரியான திருநங்கை
பிச்சை எடுப்பதை விட்டு காய்கறி வியாபாரியான திருநங்கை
பிச்சை எடுப்பதை விட்டு காய்கறி வியாபாரியான திருநங்கை
ADDED : ஆக 04, 2025 05:26 AM

பாலினம் காரணமாக பலரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வீட்டை விட்டு விரட்டப்பட்ட திருநங்கை, இப்போது காய்கறி வியாபாரியாகி, யாரிடமும் கையேந்தாமல் தன்மானத்துடன் வாழ்ந்து, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
பாகல்கோட் நகரில், மிகவும் கவுரவமான குடும்பத்தில் பிறந்தவர் ஹைதர் அலி, 24. இவர் பருவ வயதை எட்டிய போது, உடலில் மாற்றம் ஏற்பட்டு, தன்னை பெண்ணாக உணர துவங்கினார். பெண்களை போன்று உடை அணிய துவங்கினார். அலங்காரம் செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மிரட்டியும், அடித்தும் பயன் இல்லை. அவரை வீட்டில் இருந்து விரட்டினர். வீட்டை விட்டு வெளியேறிய ஹைதர் அலி, முற்றிலும் பெண்ணாக மாறினார். தன் பெயரை சனம் என, மாற்றிக்கொண்டார். முதலில் பிச்சை எடுத்தார்; பாலியல் தொழில் செய்தார். இவருக்கு சமுதாய தலைவர் சமீர் கரஜகி அறிமுகமானார். இவரது வழிகாட்டுதலால் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலையும் விட்டுவிட்டு கவுரவமான வாழ்க்கையை துவக்கினார்.
திருநங்கையரின் மறுவாழ்வுக்காக, தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்தும் தொழிற் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து காய்கறி வியாபாரத்தை துவக்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவருக்கு பாகல்கோட் மாநகராட்சியினர், மார்க்கெட்டில் கடை கொடுத்துள்ளனர். தற்போது சமுதாயம் இவரை பார்க்கும் பார்வையே மாறியுள்ளது. இதுவரை எள்ளி நகையாடிய பலரும், மரியாதையுடன் பார்க்கின்றனர்; பேசுகின்றனர்.
அது மட்டுமல்ல, குடும்பத்தினரும் இவரை ஏற்றுக்கொண்டனர். தற்போது பாகல்கோட்டின், நவநகரில் கூட்டுக் குடும்பத்தில் சனம் வசிக்கிறார். திருநங்கைகள் என்றால் பிச்சை எடுப்பவர், அடுத்தவரை மிரட்டி பணம் பறிப்பவர், பாலியல் தொழில் செய்பவர் என்ற தவறான கருத்தை சனம் தகர்த்தெறிந்துள்ளார். தன் சமுதாயத்தினருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
திருமணம் இது குறித்து சனம் கூறியதாவது:
எனக்கு 14, 15 வயது இருக்கும் போது, பெண் என்ற உணர்வு ஏற்பட்டது. இனி பெண் போன்று உடை அணிந்து கொள்கிறேன் என, என் தாயிடம் கூறினேன். அதிர்ச்சி அடைந்த அவர், திட்டி கண்டித்தார். என்னை சரி செய்ய குடும்பத்தினர் பல வழிகளில் முயற்சித்தனர். எனக்கு திருமண ஏற்பாடுகளும் செய்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும்படி 'பிளாக்மெயில்' செய்து, திருமணம் நிச்சயம் செய்ய முற்பட்டனர். ஆனால் என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாக கூடாது என்பதால், அதை எதிர்த்து நின்றேன். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.
அதன்பின் வாழ்க்கை நடத்த, பிச்சை எடுத்தேன்; பாலியல் தொழில் செய்தேன். இதற்காக என்னை நானே வெறுத்தேன். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்போது எங்கள் சமுதாய சங்கத்தின் சமீர் கரஜகி என் வாழ்க்கையை மாற்றினார். காய்கறி வியாபாரி ஆனேன்.
என்னை திட்டி, காலால் எட்டி உதைத்தவர்கள், இப்போது மரியாதையுடன் பேசுகின்றனர். நகரில் எனக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது. வரும் காலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்கும் பெரிய கடை திறக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -