/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பளு துாக்கும் போட்டியில் அசத்தும் உஷா
/
பளு துாக்கும் போட்டியில் அசத்தும் உஷா
ADDED : டிச 08, 2025 05:47 AM

-நமது நிருபர் -
கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண், இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பளு துாக்கும் போட்டியில் பங்கேற்று, ஆறாவது இடத்தையும், சிங்கப்பூரில் நடந்த போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், கோனனுார் பேரூராட்சியின், பன்னுார் கிராமத்தில் வசிப்பவர் நடேஷ்குமார். இவரது மனைவி வனஜாக்ஷி. இத்தம்பதியின் மகள் உஷா, 23. இவர் பளு துாக்கும் வீராங்கனை. இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்துள்ளார். சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற உஷா, ஆறாவது இடத்தை பிடித்தார். சிங்கப்பூரில் நடந்த பளு துாக்கும் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம், சீனியர் தேசிய பளு துாக்கும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள், மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இதற்கு முன், தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டு வெள்ளி பதக்கங்கள், மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார். தேசிய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில், ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவரது சாதனையை அடையாளம் கண்டு, 2023ல் கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் விருது வழங்கி கவுரவித்தது. மாநில அரசும் உஷாவுக்கு 'ஏகலைவா' விருது அறிவித்தது. டிசம்பர் 1ல், இவருக்கு முதல்வர் சித்தராமையா, இந்த விருதை வழங்கி பாராட்டினார். தட்சிணகன்னடா மாவட்டம், மூடபிதரேவில் உள்ள ஆல்வா கல்லுாரியில் படித்த உஷா, தற்போது மத்திய அரசு பணியில் இருக்கிறார்.

