பார்வையற்றோருக்காக ஐ.நா.,வில் குரல் கொடுத்த வேதாஸ்ரீ
பார்வையற்றோருக்காக ஐ.நா.,வில் குரல் கொடுத்த வேதாஸ்ரீ
ADDED : மார் 16, 2026 06:55 AM

- நமது நிருபர் -
'எந்த தடையும் இல்லாத உலகம் - -பார்வையற்றோருக்கான சவால்' குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'எனேபிள் இந்தியா' என்ற அமைப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண் வி.வேதாஸ்ரீ, தனது அழுத்தமான கருத்தை, ஐ.நா.,வில் பதிவு செய்தார்.
பெங்களூரு - மைசூரு சாலையில் உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்த வடிவேலு - -ஜெயபாரதி தம்பதியின் மூத்த மகள் வேதாஸ்ரீ. எம்.எஸ்.டபிள்யு., பட்டதாரி. பெங்களூரில் பிரபலமான தெரேசா பள்ளியில் படித்தார்.
இவரது தாய் ஜெயபாரதி, சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணனின் மகள். மத்திய அரசின் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட தலைவராக இருந்தவர். பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர். இவர் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார்.
தந்தை வடிவேலின் ஊக்கத்தில், தாயை போன்று சமூக சேவையில் வேதாஸ்ரீ ஈடுபட்டு வருகிறார். 'எனேபிள் இந்தியா' என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து, மாற்றுத்திறனாளிகளின் நல உரிமைகளுக்காக செயல்பட்டு வருகிறார்.
'எனேபிள் இந்தியா' அமைப்பு, இவரை வியன்னாவில் உள்ள அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையில், கடந்த பிப்ரவரியில் நடந்த மாநாட்டில் பங்கேற்க அனுப்பியது. இதில் பார்வையற்றோர் நலனை கருத்தில் கொண்டு, 100 நாடுகளைச் சேர்ந்த 1,400 பேர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற வேதாஸ்ரீ, 'உள்ளூர் மட்டத்தில் உருவாகும் புதுமைகளை உலகளவில் விரிவுபடுத்துவதில்- எந்த தடைகளும் இல்லாத உலகம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
உலக நடைமுறையோடு சேர்ந்து வாழ்ந்து, தன்னால் இயன்ற வரை பிறருக்கு பயனுள்ள உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து நல்லொழுக்கத்துடன் வாழ்வதையும், சமூகத்தோடு இணக்கமான நல்லுறவில் இருப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மனித நேயத்துடன் ஊருக்கு உழைப்பதுடன், முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், புதுமைகளை பகிரவும், ஒரு உலகளாவிய சவாலின் சந்திப்பாக இம்மாநாடு திகழ்கிறது. இதற்காக, உலகளாவிய சிந்தனையுடன் இங்கு கூடியுள்ளோம். பார்வையற்றவர்கள் நலன், அவர்களின் முன்னேற்றம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு, திறந்த மனப்பான்மையுடன் விளங்க, மனித நேயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உலகில் பார்வை குறைபாடு உள்ளவர்களை பாதுகாக்க, நவீன தொழில்நுட்பத்தில் கண் சிகிச்சை, ஹைடெக் மருத்துவ வசதிகள் பெருகி வருகின்றன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு மருத்துவ சலுகைகள் கிடைக்கும் வகையில் ஐ.நா., சபை செயல்பட வேண்டும்.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பார்வையற்றோரை கருத்தில் கொள்வது அவசியம். உலகில் உள்ள பார்வையற்றோர் எண்ணிக்கை, அவர்களின் செயல்பாட்டு விபரங்களை கண்டறிவது அவசியம். மாற்றுத்திறனாளிகளின் அரிய சாதனைகளை ஊக்குவிக்க உலக நாடுகள் முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
