/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
புதிய ரக போர்வை தயாரித்து பெண் சாதனை
/
புதிய ரக போர்வை தயாரித்து பெண் சாதனை
ADDED : ஆக 24, 2025 11:17 PM

நெருக்கமானவர்களின் நினைவாக இருக்கும் பழைய ஆடைகளை வைத்து, தனது தொழிலில் புதிய வகை போர்வையாக மாற்றி, ஒரு பெண் சாதித்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் பாராஹ அகமது. ஒரே நேரத்தில் தனக்கு நெருக்கமானவர்களை இழந்து, அதில் இருந்து மீண்டு, அவர்கள் நினைவாக துவங்கிய தொழிலில், இன்று சாதித்து வருகிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது முறையாக தாக்கிய போது, 2021ல் நான், எனது தாயார், தம்பி ஆகியோர் பாதிக்கப்பட்டோம். இதில், இருவரையும் இழந்தேன். என் ரத்த சம்பந்தமாக இருந்த தாயும், சகோதரனையும் இழந்ததால், நடைபிணமாக தவித்து வந்தேன்.
இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆனது. ஒரு நாள் வீட்டில் கப்போர்டை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அதில், என் தாயார் பயன்படுத்திய ஆடைகள், கைக்குட்டை உட்பட பொருட்கள் இருந்தன. அதை துாக்கி எறிய எனக்கு மனம் வரவில்லை. இதனை அப்படியே வைத்திருக்கவும் முடியாது. அப்போது தான், அவரின் ஆடைகளை வைத்து போர்வையாக மாற்றினேன்.
தினமும் இதை என் மீது போர்த்தி கொண்டு துாங்கும் போது, என் தாயார் என்னை அரவணைத்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதேபோன்று என் சகோதரனின் ஆடைகளை வைத்து போர்வையாக மாற்றினேன். இதை பார்த்த நண்பர்கள், உறவினர்களும் தங்களுக்கும் அதுபோன்று செய்து கொடுக்கும்படி கேட்டனர்.
இதையே தொழிலாக செய்யலாமா என்று யோசனை ஏற்பட்டது. அப்போது என் தாய் நினைவாக செய்து வைத்திருந்த போர்வையை என் மீது சுற்றியபடி அமர்ந்திருந்தேன். அப்போது 'இந்த தொழிலில் நீ வெற்றி பெறுவாய்' என்று என் தாய் காதில் பேசிய உணர்வு ஏற்பட்டது.
குழந்தைகளுக்கும் அன்று முதல் இத்தொழிலில் இறங்கினேன். பலரும், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் குறித்து கண்கலங்கி பேசும் போது, நான் எத்தகைய செயலை துவக்கி உள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொண்டேன்.
என் சகோதரரின் ஆடைகளால் செய்யப்பட்ட போர்வையை, என் மருமகன் பயன்படுத்துவதை பார்ப்பது எனக்கு ஆறுதலை தருகிறது. நினைவுகளை தக்க வைத்து கொள்ளும் வகையில் செய்யப்பட்ட இந்த போர்வைகள் மிகவும் நன்றாக உள்ளது.
இது தவிர, நம் குழந்தைகள் சிறிய வயதில் பயன்படுத்திய ஆடைகளையும், போர்வையாக தயாரித்து, வளர்ந்த அதே குழந்தைக்கு பரிசாக வழங்கும் பெற்றோரும் உள்ளனர். அவ்வாறு கேட்போருக்கும் போர்வை தயாரித்து தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - .