ADDED : மார் 24, 2025 05:10 AM

கர்நாடக கிராமப்புறங்களில் அமைந்துள்ள நுாலகங்கள், பெண்களையும் படிப்பாளிகள் ஆக்குகின்றன. நுாலகம் ஒன்றில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றிய செய்தியை, கிராமத்து பெண்ணொருவர் ஆர்வத்துடன் படிக்கும் போட்டோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியுள்ளது.
கிராமப்புற பெண்களுக்காக, 'அறிவு மையம்' என்ற பெயரில் நுாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை. பெண்கள், மாணவர்கள் என, அனைவரும் இலவசமாக புத்தகங்களை படிக்கலாம். தினமும் இங்கு வந்து நாளிதழ்கள் படிக்கலாம்.
இதற்கு முன் நகர்ப்பகுதி மக்களின் வசதிக்காக, அங்கொன்றும், இங்கொன்றுமாக நுாலகங்கள் அமைந்துள்ளன. ஆனால் இப்போது கிராமங்களில் இலவச நுாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களும் மாலை நேரத்தில் ஆர்வத்துடன் நுாலகத்துக்கு வந்து, விருப்பமான புத்தகங்கள் படிக்கின்றனர். நாளிதழ்கள் படித்து, நாட்டு நடிப்பை தெரிந்து கொள்கின்றனர்.
இளம் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் மட்டுமின்றி, படிக்க தெரிந்த மூதாட்டிகளும் கூட நுாலகங்களுக்கு செல்வதை காண முடிகிறது. விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றி, உடுப்பியின், கர்ஜியில் உள்ள அறிவு மையத்தில் மூதாட்டி ஒருவர், நாளிதழில் வெளியான செய்திகளை ஆர்வத்துடன் படித்தார்.
இந்த படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள, கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலர் உமா மஹாதேவன் தாஸ் குப்தா, பாராட்டு தெரிவித்துள்ளார் - நமது நிருபர் -.