/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
துப்புரவு பணியில் கலக்கும் மகளிர் படை
/
துப்புரவு பணியில் கலக்கும் மகளிர் படை
ADDED : டிச 29, 2025 06:39 AM

ஒரு காலத்தில் பெண்கள், தினமும் காலையில் எழுந்தவுடன் சமையல் அறைக்குள் சென்று சமையல் செய்வதில் ஈடுபடுவர். இப்போது காலம் மாறிவிட்டது; ஆட்டோ ஓட்டுவது முதல் விமானம் ஓட்டுவது வரை அனைத்து பணிகளையும், பெண்கள் செய்து அசத்துகின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளன. இவற்றை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். அவர்களை உள்ளாட்சிகளும் ஊக்கப்படுத்துகின்றன. தற்போது கிராமங்களை சுத்தமாக வைத்திருக்கவும், பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மாண்டியா மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில், துப்புரவு பணிகளுக்கு பெண்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி நந்தினி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவின், பல கிராம பஞ்சாயத்துகளில், துப்புரவு தொழிலாளர்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர்.
மலவள்ளி தாலுகாவில், 39 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில், 27 கிராம பஞ்சாயத்துகளில், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குப்பை அள்ளுவது, வாகனம் ஓட்டுவது என, அனைத்துமே பெண்கள் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தற்போது கிராமங்களில் குப்பை வாகனம் ஓட்டுகின்றனர். இவர்களுக்கு அந்தந்த கிராம பஞ்சாயத்துகள் ஊதியம் வழங்குகின்றன.
இதற்கு முன் குப்பை அள்ளுவதையும், குப்பை வாகனம் ஓட்டுவதையும் அவமானமாக நினைத்தனர்.
இப்போது இந்த வேலை பெண்களுக்கு கை கொடுத்துள்ளது. தினமும் குப்பை அள்ளும் பணியை முடித்த பின், ஆட்டோ ஓட்டச் செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. யாரையும் சார்ந்திராமல், தன்மானத்துடன் வாழ முடிகிறது. காக்கி சட்டை அணிந்தபடி, கம்பீரமாக ஆட்டோ ஓட்டுவதை, பல கிராமங்களில் காண முடிகிறது. கிராமங்களும் சுத்தமாக தென்படுகின்றன.
அதற்காக குடும்பத்தை அலட்சியப்படுத்தவில்லை. காலையில் வீட்டில் அனைத்து கடமைகளையும் முடித்து கொண்டு, ஆட்டோ ஓட்டும் பணிக்கு செல்கின்றனர். குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தருகின்றனர்.
மற்றவருக்கு தொல்லை தராத, தவறான வழியில் செல்லாத, எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல. செய்யும் தொழிலே தெய்வம் என, நினைத்து குப்பை வாகனம் ஓட்டும் பணிக்கு, பெண்கள் ஆர்வமாக முன் வருகின்றனர். இதே போன்று மற்ற மாவட்டங்களின், கிராம பஞ்சாயத்துகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்
- நமது நிருபர் - .

