/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
'நரேகா' திட்டத்தில் ஓங்கிய மகளிர் கை!
/
'நரேகா' திட்டத்தில் ஓங்கிய மகளிர் கை!
ADDED : மார் 24, 2025 04:53 AM

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தும், 'நரேகா' திட்டத்தில், பெண்களின் கையே ஓங்கியுள்ளது. கிராம பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது.
ஆண்களுக்கு சமமாக, அனைத்து துறைகளிலும் தடம் பதிக்கும் பெண்கள், 100 நாள் வேலை உறுதி திட்டம் எனும், 'நரேகா' திட்டத்திலும் முன்னணியில் உள்ளனர். இவர்களின் கையே ஓங்கியுள்ளது. இதற்கு முன் கிராமத்து பெண்கள், கணவர், பிள்ளைகள் கவனிப்பு, வீடு பராமரிப்பு என, சிறிய உலகத்தில் பொழுதை போக்கினர். தங்கள் தேவைக்கு கணவரின் கையை எதிர்பார்க்க வேண்டி இருந்தது.
குடும்பத்தை நிர்வகிக்கவும், தங்களுக்கு தேவையானதை வாங்கவும் பணம் போதாமல் திணறினர். ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. நரேகா திட்டம் பெண்களின் பொருளாதார உயர்வுக்கு உதவுகிறது. ஆண்களுக்கு சமமாக சம்பாதிக்கின்றனர். கணவருக்கு கைகொடுக்கின்றனர். இத்திட்டம் பெண்களுக்கு புது வாழ்வு அளிக்கிறது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், நரேகா திட்டத்துக்கு பெண்கள் இடையே, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளும் கூட, நரேகா திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்று, யாரையும் சார்ந்திராமல் தன்மானத்துடன் வாழ்கின்றனர். ஷிவமொக்கா மாவட்டத்திலும் கூட, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்த மாவட்டத்தில் பெண்களே அதிக எண்ணிக்கையில், நரேகா திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஷிவமொக்கா மாவட்டத்தின், ஏழு தாலுகாக்களில் 263 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 2.42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், வேலை உறுதி திட்ட கார்டு பெற்றுள்ளனர். இதில் 54.95 சதவீதம் பெண் தொழிலாளர்களாவர். கொரோனா நேரத்தில், இத்திட்டம் பெண்களுக்கு கைகொடுத்து உதவியது. ஏரிகள் சீரமைப்பு, கால்வாய் சீரமைப்பு, சாலைகள் அமைப்பது, அரசு கட்டடங்கள், குளம் வெட்டுவது, பள்ளி கட்டுமானம் என, பல்வேறு பணிகளில் ஆண்களை விட பெண்களின் பங்களிப்பு அதிகம்.
இது தொடர்பாக, ஷிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., ஹேமந்த் கூறியதாவது:
நரேகா திட்டம் ஷிவமொக்கா மாவட்டம் மட்டுமின்றி, நாடு முழுதும் வெற்றிகரமாக செயல்படுகிறது. எங்கள் மாவட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில், திட்டத்தில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். தற்போது பணி நாட்களை 100 லிருந்து, 150 ஆக உயர்த்த ஆலோசிக்கிறோம்.
இதற்கு முன் வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, 150 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. நிரந்தரமாக 150 நாட்களாக்க மத்திய அரசு, ஆர்வம் காட்டுகிறது. இது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.