பால் பண்ணை தொழிலில் பெண் மருத்துவர் உலக அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை
பால் பண்ணை தொழிலில் பெண் மருத்துவர் உலக அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை
ADDED : ஆக 16, 2026 11:01 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் பால் பண்ணை துவங்கிய பெண் மருத்துவர் ஒருவர், தினமும் 3,000 லிட்டர் பால் உற்பத்தி செய்து, உலக சுகாதார அமைப்பின் முதல் மூன்று பால் பண்ணையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.
துமகூரு மாவட்டம், துருவ கெரே தாலுகாவின் கடேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் ஜோதி. பெங்களூரில் தன் மருத்துவ கல்வியை முடித்தார். இவரது தந்தை புட்டலிங்கய்யா, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.
ஜோதிக்கும், ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா தாலுகாவின் ஹிரிசவேயை சேர்ந்த உமேஷுக்கும் திருமணம் நடந்தது. பட்டய கணக்காளரான உமேஷின் குடும்பத்தினர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாய் ஏற்கனவே மாடுகளை வளர்த்து வந்தார்.
இதனால், சிறு வயதில் இருந்தே உமேஷுக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருந்தது. திருமணத்துக்கு பின், இருவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், விவசாயத்தில் இருவருக்கும் அதீத ஈடுபாடு இருந்தது.
இதனால் விவசாயத்தில் ஈடுபட திட்டமிட்ட அவர்கள், 2004ல் தாங்கள் சேமித்த பணத்தில் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகாவில் உள்ள கரியாக்களுக்கு அருகில் நிலம் வாங்கினர்.
பின், இரு பசுக்களை வாங்கினர். தினமும் 10 லிட்டர் பால் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினர். வீட்டுக்கு போக மீதமுள்ள பாலை, அருகில் உள்ள பூரா கிராமத்தில் இருந்த பால் பண்ணைக்கு வழங்க துவங்கினர்.
நான்கு ஆண்டுகளில், 55 மாடுகளை வாங்கி, தொழிலை விரிவுபடுத்தினர். தங்களின் பணிகளுக்கு இடையேயும், பால் பண்ணை தொழிலுக்கும் நேரம் ஒதுக்கினர்.
கடந்த 2016ல் கூடுதலாக நிலங்கள் வாங்கியதை அடுத்து, பசுக்களின் எண்ணிக்கையும் 200ஐ தாண்டியது. இதன் மூலம் பால் பண்ணைக்கு பால் வினியோகிப்பதுடன், மாத வருமானமும் அதிகரித்தது. இதையடுத்து பண்ணையை கவனித்து கொள்ள, வேலையாட்களை நியமித்தனர்.
பின், 4 ஏக்கர் பரப்பளவில் நவீன பால் பண்ணையை துவக்கிய அவர்கள், அதிக பால் தரும் ஜெர்சி வகை பசுக்களை வாங்கினர். அதன் பின், மாடுகளின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்தது. தற்போது தினமும் 2,500 முதல் 3,000 லிட்டர் வரை பால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாலை, அனைத்து கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான பண்ணைக்கு வினியோகிக்கின்றனர். மைசூரு பால் கூட்டமைப்பின் கீழ் மிகப்பெரிய பால் வினியோகஸ்தராக இருந்த டாக்டர் ஜோதி, பின், மாநிலத்தின் மிகப்பெரிய பால் வினியோகஸ்தர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
இந்த பால் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அரசிடம் இருந்து, 1 லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியம் பெறுகிறார். அதையும் சேர்த்தால், 5 கோடி ரூபாயை எட்டும்.
தன் வெற்றி குறித்து டாக்டர் ஜோதி கூறுகையில், ''என் கணவர் உமேஷின் கால்நடை வளர்ப்பில் இருந்த ஆர்வம், அவரிடம் இருந்து துவங்கி, விவசாயம் வரை விரிவடைந்து உள்ளது. நான், என் தொழிலுடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளேன்.
''என் கணவரும் முழு ஆதரவு அளிப்பதால், இது பெருமளவில் வளர்ந்துள்ளது. மருத்துவத்துடன், கூட்டுறவு துறையிலும் ஓர் அங்கமாக நான் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
அவரது கணவர் உமேஷ் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் சபை, இந்தாண்டு சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, விவசாய துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை அங்கீகரித்துள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த ஒரு பெண், 1,200 மாடுகளுடன் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டு, முதலிடத்தில் உள்ளார். அதுபோன்று இரண்டாவது இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் உள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜோதி, 670 மாடுகளுடன் பால் உற்பத்தி செய்கிறார்.
இவர்கள் மூவரும், டபிள்யூ.எச்.ஓ., எனும் உலக சுகாதார அமைப்பின் முதல் மூன்று பால் பண்ணையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு; என்.டி.டி.பி., எனும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை அடுத்து, டபிள்யூ.எச்.ஓ.,வும் எங்களை அங்கீகரித்திருப்பது பெருமை அளிக்கிறது.
இவ்வறு அவர் கூறினார்.
