ADDED : ஏப் 20, 2026 02:11 AM

- நமது நிருபர் -:
''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு'' என கேட்ட காலமெல்லாம் காணாமல் போய் விட்டது. தற்போது, அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்ணால் முடியாது எதுவுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
பெண்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான பாதையில் நீண்ட துாரம் பயணித்து செல்கின்றனர். அப்படி முடிவில்லா சாலைகளில் தனது பைக்கில் நீண்ட துாரம் பயணம் செய்து கொண்டிருக்கும்
மேகனாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மைசூரை சேர்ந்தவர் மேகனா, 28. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர் தனது அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் போவதற்கு பதிலாக, பைக்கில் செல்வதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு பைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். இதனால், எப்போதும் பைக்குடனே அதிக நேரத்தை செலவிடுவார்.
இலக்கை நோக்கி பயணம் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக 2017ல் தனது வேலையில் இருந்து நின்றுவிட்டார். ஜம்மு காஷ்மீருக்கு பைக்கில் தனியாக பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் பல மேடு, பள்ளங்களை கடந்து சென்றார்.
அதுபோல சில சூழ்நிலைகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில மனிதர்களையும் சமாளித்து, இலக்கை நோக்கி பயணித்தார்.
இந்த பயணத்தை பத்திரமாக முடித்துவிட்டு வீடு திரும்பினார். இதையடுத்து, கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்தார். பின், கொரோனா முடிந்ததும் எங்கேயாவது நீண்ட துாரம் தனியாக பைக்கில் பயணிக்க முடிவு செய்தார்.
இவர் நினைத்ததை முடிப்பவர் என்பதால், உடனடியாக தனது பைக்கை, 'ஸ்டார்ட்' செய்து புறப்பட்டார். இம்முறை, வெளிமாநிலங்களில் சுற்றுலா செல்வதற்கு பதிலாக, கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பைக்கில் பயணிக்க திட்டமிட்டார்.
இவர், பெங்களூரில் வேலை பார்க்கும் போது பல மாவட்டங்களை சேர்ந்த நண்பர்களின் பழக்கம் கிடைத்திருந்தது. இது அவரது பயணத்திற்கு உதவியாய் இருந்தது. ஹெல்மெட், பைக்கர்ஸ் அணியும் உடை ஆகியவற்றை அணிந்தவாறு பைக்கில் புயல் வேகத்தில் பறந்தார். இந்த பயணத்தில் பல தரப்பட்ட மனிதர்களை பார்த்து, அவர்களிடம் பேசி பழகினார்.
ஒரு பெண் தனியாக பயணம் செய்யும் போது பல பிரச்னைகள் எழும். இவை அனைத்தையும் சாமார்த்தியமாக சமாளித்தார். வெறும் 60 நாட்களில் 31 மாவட்டங்களில் 7,500 கி.மீ., துாரம் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம், கர்நாடகா முழுதும் பைக்கில் தனியாக சுற்றிவந்த முதல், 'பெண் சோலோ பைக் டிராவலர்' என்ற பெருமையை பெற்றார்.
இது குறித்து, மேகனா கூறியதாவது:
நான், என் பைக்கில் பல இடங்களுக்கு பயணம் செய்து உள்ளேன். வடக்கே ஜம்மு வரையும் சென்று உள்ளேன். அப்போது, நம் மாநிலத்தில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனால், கர்நாடகா முழுதும் சுற்றி வந்தேன். ஒரு பெண் தனியாக பைக்கில் பயணிப்பது சாதாரண விஷயம் கிடையாது. பல இன்னல்களை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் நமக்கு பாதுகாப்பு இருக்காது. இது அனைத்தையும் நான் சாமார்த்தியமாக கையாண்டேன்.
இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை. எனது பைக் பயணம், என் வாழ்நாள் முழுதும் தொடரும். வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் பைக்கில் பயணிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. ஒரு முறை கூட பைக்கில் இருந்து கீழே விழுந்ததில்லை. என் பைக் தான் எனது முதல் காதலன்.
இவ்வாறு அவர் கூறினார்.
