ADDED : பிப் 28, 2025 06:08 AM

முன்னொரு காலத்தில், மாநிலம், தேசிய அளவில் குஸ்தியில் கலக்கிய தாவணகெரேயில், தற்போது, இந்த வீர விளையாட்டில் பங்கேற்பதில் இளைஞர்கள் இடையே மோகம் குறைந்து வருகிறது.
குஸ்திக்கு புகழ் பெற்றது தாவணகெரே. இம்மாவட்டத்தில் இருந்து பல வீரர்கள், மாநிலத்திலும், மாநிலங்கள் இடையேயும், தேசிய அளவிலும் சிறந்த வீரர்களை உருவாக்கி உள்ளது.
100 ஆண்டுகள்
பயில்வான்களை உருவாக்கவே, இம்மாவட்டத்தில், நுாற்றுக்கணக்கில் இருந்த 'கரடி மனே' என்ற குஸ்தி பயிற்சி மையம் இருந்தது. தற்போது நான்கைந்து மட்டுமே உள்ளன. இதற்கு, இளைஞர்களின் 'ஜிம்' மோகம் அதிகரிப்பதே இதற்கு காரணம்.
தற்போது நுாறு ஆண்டுகளை கடந்த 'ஜெய் ஹிந்த் கரடி மனே' மற்றும் 'மக்கான் கரடி மனே' என குஸ்தி பயிற்சி மையங்கள் மட்டுமே நகரில் உள்ளன. இவ்விரு மையத்திலும் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கான வீரர்கள், மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஜெய் ஹிந்த் கரடி மனேயில் பயிற்சி பெற்று வரும் யஷ்வந்த் ராவ் ஜாதவ் கூறியதாவது:
ஜெய் ஹிந்த் கரடி மனே மற்றும் மக்கான் கரடி மனே என குஸ்தி பயிற்சி மையங்களுக்கும் நுாறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் மாநில அளவிலும், மாநிலங்களுக்கு இடையேயும் நடந்த போட்டிகளில், பல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
ஸ்டார் நாகப்பா, தோட்டகிரா மல்லப்பா, சார்லி, சண்முகண்ணா, ராப் ஹரிஹர் ராமப்பா, சாதிக் அலி பர்கர், யஷ்வந்த் ராவ், மல்தேஷ் ராவ், மஞ்சு என பலர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போன் மோகம்
மொபைல் போன், சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மூழ்கி உள்ளனர். இந்த கலையில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பயிற்சிக்கு வைக்கப்பட்டுள்ள கல் தண்டாயுதங்கள், கல் தடிகள், இரும்புக் கம்பிகள் பழுதடைந்து வருகின்றன.
திருவிழாக்கள், கண்காட்சிகளில் மட்டுமே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. மெல்ல மெல்ல மங்கும் இக்கலையை ஊக்குவிக்க, ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில் திருவிழாக்களின் போது, குஸ்தி போட்டியை நடத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஸ்தி போட்டியில் பங்கேற்கும் பயில்வான்கள், 50,000 ரூபாய் வரை செலவழித்து தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு முறையான பயிற்சி தேவை.
தினமும் அதிகாலை 4:00 மணிக்கே பயிற்சி துவங்கி விடும். முன்னர் 20 முதல் 25 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது நான்கைந்து பேர் மட்டுமே பயிற்சிக்கு வருகின்றனர்.
குஸ்தி என்பது எங்கள் குடும்ப பாரம்பரியம். தினமும் வீட்டிலும் பயிற்சி பெறுவோம். தினமும் பால், வாழைப்பழம், கோதுமை பவுடர், இறைச்சி, முட்டைகள் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி, மண்ணை சரிசெய்வது, பளு துாக்குதல் என பல பயிற்சிகள் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஸ்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் மவுனீஷ் கூறுகையில், ''நடிகர்கள் சுனில் ஷெட்டி, சுதீப் ஆகியோர் நடித்த பயில்வான் திரைப்படத்தை பார்த்து, இங்கு சேர்ந்தேன்.
இந்த வீர விளையாட்டு, பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இதனால் இக்கலை மீதான மதிப்பு அதிகரித்து உள்ளது. குஸ்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், வீட்டில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்
. - நமது நிருபர் -