ADDED : பிப் 28, 2025 06:07 AM

பொதுவாக கிரிக்கெட்டில் பவுலருக்கும், பேட்ஸ்மேனுக்கும் சண்டை நடந்தால், பேட்ஸ்மேன் சிக்சர்கள் அடித்து பகையை தீர்த்துக் கொள்வார். ஆனால், ராகுல் டிராவிட்டிடம், பவுலர் தன் சில்மிஷத்தை காட்டினால், பவுலர் போடும் அனைத்து பந்துகளையும் மட்டையை வைத்து ரன்னே அடிக்காமல் கதற விடுவார். இது பவுலர் மட்டுமின்றி எதிர் அணி வீரர்கள் அனைவரையுமே கடுப்பில் ஆழ்த்திவிடும்.
இதனாலே, இவரை 'தி வால்' என்று கிரிக்கெட் உலகில் அழைக்கின்றனர். இந்த பட்ட பெயருக்கு உரித்தான ஒரு நபர் தான் இவர். வால் என்பதற்கு அர்த்தம், ஒரு சுவரை நோக்கி பந்தை வீசினால், பந்து சுவரில் பட்டு திரும்பும். இதனால், சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அது போல தான், ராகுலை நோக்கி எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும், அவர் சிரமப்படாமல், பந்துக்கு வலிக்காமல் 'ஸ்டோக்' வைத்து விடுவார். இப்போது, புரிகிறதா இந்த பெயருக்கான காரணம்.
சிறிய வரலாறு
இதெல்லாம் பழைய கதை தானே என நினைக்கலாம். ஆம்...பழைய கதை தான்...ஆனால், ராகுலை பற்றி பேசுவதற்கு ஒரு புதிய கதை ஒன்றும் இருக்கிறது. அதற்காகவே, அவருடைய இந்த சிறிய வரலாறு.
இன்றைய இந்திய கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள், புதிய வீரர்கள் என பெரும்பாலானோர் இந்திய ஆணியில் தேர்வாகியவுடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை மறந்து விடுகின்றனர். அதிலும், குறிப்பாக தங்களின் பெயர்கள் முன்னால் பட்டம் சூட்டிக்கொள்ளும் வீரர்கள் எல்லாம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி பக்கம் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை.
இப்படி இருக்கையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், மீண்டும் உள்ளூர் போட்டிகளில் களம் இறங்கி உள்ளார்.
தந்தையும், மகனும்
தற்போது, ஸ்ரீ நாசூர் நினைவு கேடயம் குரூப் போட்டிகள், பெங்களூரு பொம்மசந்திராவில் நடந்து வருகின்றன. இந்த போட்டிகள் 50 ஓவர் பார்மெட்டில் நடக்கின்றன. இந்த போட்டியில் ராகுல் டிராவிட், விஜயா கிரிக்கெட் சார்பில் களம் இறங்கினார். இதில், மற்றொரு சுவாரசியமான சம்பவம் என்ன என்றால் அவரது மகன் அன்வேவும், இதே அணியில் இருந்தார்.
சமீபத்தில் விஜயா கிரிக்கெட் கிளப் மற்றும் லயன்ஸ் கிரிக்கெட் கிளப் இரண்டிற்கும் இடையில் போட்டி நடந்தது. இதில், ராகுல் டிராவிட் 6 வது வீரராக களம் இறங்கினார். அப்போது, மறுமுனையில் அவர் மகன் அன்வே பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார்.
இதுபோன்ற நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றில் நடப்பது அதிசயம். அந்த அதிசயமும், பாக்கியமும் ராகுல் டிராவிட்டின் வாழ்க்கையில் நிறைவேறியது. ஆனால், எதிர்பாராத விதமாக டிராவிட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றதற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுபோல, இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது முதல்முறை அல்ல, ஏற்கனவே, பல முறை உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். - நமது நிருபர் -

