ADDED : ஜூன் 06, 2025 06:12 AM

குடும்பமே ராணுவத்தில் சேவை செய்வது போன்று, பெங்களூரை சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர் முகமது ரஹீல் மவுசீன் குடும்பமும் ஹாக்கியில் பங்கேற்றுள்ளனர்.
ஹாக்கி குடும்பம்
இவரின் தாத்தா முகமது அமிருதின், தந்தை முகமது நசீருதின் ஆகியோர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள். இவரின் சகோதரர் முகமது நயிமுதின், இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் இடம் பெற்றவர்.
தாத்தா, தந்தையை போன்று, ஐந்து வயதில் இருந்தே முகமது ரஹீல் மவுசீனுக்கும் ஹாக்கி என்றால் அலாதி பிரியம். பெங்களூரு செயின்ட் ஜோசப் பள்ளியில் படிக்கும் போது சப் - ஜூனியர், ஜூனியர் அணியில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
பெங்களூரு எஸ்.ஏ.ஐ., ஹாஸ்டலில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டபோது, தேசிய அளவிலான ஜூனியர் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டியில் விளையாடிய போது, இவரின் ஆட்டத்தை 'ஏர் இந்தியா' நிறுவனம் கவனித்தது. எஸ்.ஏ.ஐ., எனும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்காக எட்டு ஆண்டுகள் விளையாடினார். 2016 முதல் 2020 வரை ஏர் இந்தியா அணிக்காக விளையாடினார்.
2018 - 2019 காலகட்டத்தில் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான சீனியர் பயிற்சி முகாமில் பங்கேற்றார். ஆனால், அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை.
சிறந்த வீரர்
அம்ரிஸ்டரில் 2019 ல் நடந்த 'லால் பகதுார் சாஸ்திரி' போட்டியில், ஏர் இந்தியா அணி வெற்றி பெறற்து. இந்த போட்டி தொடரில், இவர் தான் அதிக கோல்கள் அடித்திருந்தார். அத்துடன் சிறந்த வீரருக்கான கோப்பையும் வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி - 2020 போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். 2021 ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில், கர்நாடக அணியில் இடம் பெற்றார். இப்போட்டியில், கர்நாடக அணி வெண்கல பதக்கம் பெற்றது.
தேசிய விளையாட்டு 2022 ல் அக்டோபரில் நடந்த போட்டியில், கர்நாடக அணிக்காக விளையாடி, தங்கப்பதக்கம் பெற காரணமாக இருந்தார். இதன் மூலம், இந்திய ஹாக்கி அணிக்கான கதவு திறந்தது. 2023 ல் சென்னையில் நடந்த சீனியர் தேசிய விளையாட்டு போட்டியில், கர்நாடகா அணியில் இடம் பெற்றார்.
ஆனால், நான்காவது இடத்தை பிடித்தார்.
2024 ல் இந்திய அணியில் இடம் பிடித்தார். அதே ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்தது.
கனவு நிறைவேறியது
முகமது ரஹீம் மவுசின் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2014 ல் பயிற்சி பெற்று வந்தேன். அந்தாண்டு ஒடிஷாவில் காளிங்கா மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடியது. இப்போட்டியை காண, நாங்கள் சென்றிருந்தோம்.
அப்போது அங்கு எழுந்த சூழ்நிலை எனக்கு பிடித்திருந்தது. அதேசூழ்நிலையில், என் நாட்டுக்காக இந்திய அணி 'ஜெர்சி' அணிந்து விளையாடுவதை, இம்மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆசை தற்போது நிறைவேறி விட்டது.
என் தந்தை, ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் அணிக்காக விளையாடினார். எனது மூத்த சகோதரர், இரண்டு முறை தேசிய அளவிலான ஜூனியர் முகாமுக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால், அவர்களால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இந்த குறையை போக்க, நான் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது ஹாக்கி விளையாட்டு, எஸ்.ஏ.ஐ.,யில் பயிற்சி பெற்றதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிந்தது. இங்கு சர்வதேச ஹாக்கி விளையாட்டு முன்னாள் வீரர் ஜூட் பிளெக்ஸ், எனது திறமையை மெருகேற்றினார்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.