ADDED : ஆக 20, 2026 11:47 PM

- நமது நிருபர் -:
மைசூரின் வரலாற்று பிரசித்தி பெற்ற, மண்டி மொஹல்லா என்றால், அங்குள்ள மல்யுத்த பாரம்பரியம், பயில்வான்களின் சாகசம், சம்பிரதாய சிகிச்சை முறை நினைவுக்கு வரும். இத்தகைய புராதன பிரசித்தி பெற்ற மண்ணில், கடந்த, 20 ஆண்டுகளாக, மல்யுத்த போட்டியில், பயில்வான் அலி ஷேர் சாதனை செய்து வருகிறார்.
மைசூரு நகரில் வசிக்கும் அலி ஷேர், 48, சிறந்த மல்யுத்த வீரர். இதில் அவர் பல சாதனைகளை செய்துள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். உள்ளூரில் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், தன் திறமையை காட்டியுள்ளார்.
பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உட்பட, நாட்டின் பல மாநிலங்களில் நடந்த, தேசிய அளவிலான மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று, விருதுகளை வென்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அலி ஷேர் மல்யுத்த விளையாட்டில் மட்டுமின்றி, பாரம்பரிய சிகிச்சை அளிப்பதிலும், சிறந்து விளங்குகிறார். இவரது முன்னோர்கள் எலும்பு முறிவு, சுளுக்கை சரி செய்வது, உடைந்த எலும்புகளை இணைப்பது உட்பட, எலும்பு பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் கை தேர்ந்தவர்கள் . வம்சாவளியாக வந்த மருத்துவ சேவையை, இப்போதும் தொடர்கிறார். மைசூரின் மண்டி மொஹல்லாவில், எலும்பு சிகிச்சை மையம் நடத்துகிறார். சிறப்பான சிகிச்சை கிடைப்பதால், அதிகமானோர் வருகின்றனர்.
அலி ஷேருக்கு அவரது தந்தை அகமதுவே, மல்யுத்த குருவாக இருக்கிறார். ஒரு பக்கம் மல்யுத்த வீரராக, களத்தில் மோதும் இவர், மற்றொரு பக்கம் தன் வம்சாவளியாகவந்த, பாரம்பரிய மருத்துவ தொழிலையும் அழியாமல் பாதுகாக்கிறார். விளையாட்டு, மருத்துவம் என, இரண்டு துறைகளிலும் ஜொலிக்கிறார்.
