மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் சின்னசாமி அரங்கம்
மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் சின்னசாமி அரங்கம்
ADDED : செப் 11, 2025 11:40 PM

கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் பலியான சம்பவத்துக்கு பின், சின்னசாமி விளையாட்டு அரங்கில், கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. ஆனால் இப்போட்டிகளை காண, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கம், பழமையான விளையாட்டு அரங்கமாகும். இதுவரை பல ஆயிரக்கணக்கான விளையாட்டுகளுக்கு, மகிழ்ச்சியான தருணங்களுக்கு சாட்சியாக உள்ளது. கிரிக்கெட் பிரியர்களுக்கு பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த மைதானம் 1969ல் அமைக்கப்பட்டது. 1977 முதல் 1980 வரை, இந்திய கிரிக்கெட் ஆணைய தலைவராக இருந்த சின்னசாமியின் பெயரை, இந்த ஸ்டேடியத்துக்கு வைத்தனர். 35,000 இருக்கைகள் கொண்டதாகும்.
இந்த விளையாட்டு அரங்கில், தேசிய, சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. சச்சின் தெண்டுல்கர் உட்பட, பல விளையாட்டு வீரர்கள், சின்னசாமி விளையாட்டு அரங்கில் செஞ்சுரி அடித்துள்ளனர். இந்த அரங்கம் போட்டிகள் நடக்கும் இடமாக மட்டுமே இல்லாமல், கிரிக்கெட் பயிற்சி மையமாகவும் விளங்குகிறது.
அனைத்து வயதினருக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல பெருமைகளை கொண்டுள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கத்துக்கு, சில மாதங்களுக்கு முன் நடந்த அசம்பாவிதம், களங்கத்தை ஏற்படுத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐ.பி.எல்., கோப்பை வென்றதால், நடப்பாண்டு ஜூன் 4ம் தேதி, சின்னசாமி விளையாட்டு அரங்கில், வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுதும் அதிர்ச்சியை அளித்தது.
இந்த சம்பவம் நடந்த பின், சின்னசாமி விளையாட்டு அரங்கில், எந்த போட்டியும் நடக்கவில்லை. மஹாராஜா கோப்பை, ஐ.சி.சி., மகளிர் உலக கோப்பை உட்பட, இங்கு நடக்கவிருந்த பல போட்டிகள், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் அளித்தது.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின், கிரிக்கெட் போட்டிக்கு, சின்னசாமி விளையாட்டு அரங்கம் தயாராகிறது. முன்னாள் இந்திய அணியின் திம்மப்பய்யா நினைவு கோப்பை போட்டிகள், சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ளது. இங்கு நடக்கும் போட்டிகளில் மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத் அணிகள் மோதுகின்றன.
போட்டிகளில் வெங்கடேஷ் அய்யர், விஜய் சங்கர், சஷாங்க், முன்னாள் கிரிக்கெட் ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் உட்பட, பலர் பங்கேற்பர். செமி பைனல், பைனல் போட்டிகள் இதே விளையாட்டு அரங்கில் நடக்கும். ஆனால் போட்டிகளை பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது.
- நமது நிருபர் -