சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 23, 2026 05:59 AM

- நமது நிருபர் -
சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது மீண்டும் போட்டிகள் நடத்த நிபந்தனைகளுடன் மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மைதானத்தின் நுழைவுவாயில்களை 6 மீட்டர் வரை அகலப்படுத்துதல்; குழந்தைகள், பெண்கள் மைதானத்தில் நுழைய தனி வரிசை; மைதானத்தின் வெளிப்புறமுள்ள சாலையில் கூட்டநெரிசல் ஏற்படுவதை தடுத்தல்; பார்வையாளர்கள் அமரும் இடங்களில் கூடுதலாக தடுப்புகள் அமைத்தல்; மைதானத்தினுள் தீயணைப்பு வாகனம் எளிதில் நுழைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது:
தீயணப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடக்கின்றன. 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் என, மாநில அரசு நிபந்தனை விதித்து உள்ளது. ஏற்கனவே, 30,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் அளவிற்கு நிலத்தடியில் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே, 20,000 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவிற்கான தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் தொடர்பான அனைத்து சாதனங்களும் சரியாக உள்ளதாக பெஸ்காம் கூறி உள்ளது.
மைதானத்தின் நடக்கும் மேம்பாட்டு பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கை, மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதில், அனைத்து தகவல்களும் இ டம்பெற்று உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

