ADDED : ஜன 02, 2026 06:00 AM

மல்யுத்தம், நம் நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டு, சிறிது சிறிதாக நலிவடைந்து வருகிறது. சில இடங்களில் மல்யுத்தத்தை காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர்.
கதக் மாவட்டம், ரோணா தாலுகாவில் உள்ள ஜக்கலி கிராமத்தினர், 70 ஆண்டுகளாக மல்யுத்தத்தை பாதுகாக்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக மல்யுத்த வீரர்களை உருவாக்குகின்றனர். கிராமத்தின் பெரியோர்கள், மல்யுத்த பயில்வான்கள், இளைஞர்களுக்கு மல்யுத்தம் கற்றுத்தருகின்றனர். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்துகின்றனர். இளைஞர்கள் வெற்றி பெற்று, கிராமத்துக்கு பெருமை சேர்க்கின்றனர்.
ஜக்கலி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட பயில்வான்கள் உள்ளனர். பல்வேறு கிராமங்களில் இருந்து, இளைஞர்கள், இங்குள்ள பயில்வான்களிடம் மல்யுத்தம் கற்க வருகின்றனர்.
ஜக்கலி கிராமத்தின் இளைஞர்கள், மல்யுத்தத்தில் பங்கேற்க வேண்டும். பதக்கங்கள், விருதுகள் பெற வேண்டும் என்பதற்காக, 1959ல் பயிற்சி மையம் கட்டப்பட்டது. கிராமத்தின் மைதானத்தில் சேற்றில், பயில்வான்கள் மோதிக்கொள்வர்.
அன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதுடன், கிராமத்திலும் போட்டிகள் நடத்துகின்றனர். பயிற்சி மையத்தில் பயில்வான்கள் கடுமையான பயிற்சி பெறுகின்றனர். நுாற்றுக்கணக்கான எடையுள்ள பாரத்தை இழுப்பது, 75 முதல் 100 கிலோ எடையுள்ள குண்டு கற்களை துாக்குவது உட்பட, பல பயிற்சிகளை செய்து உடலை வலுப்படுத்துகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கிராமத்து காவல் தேவதைக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது, மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. பயில்வான்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ராமண்ணா ஹலகியும் கூட, மல்யுத்த வீரர் தான். பல போட்டிகளில் பங்கேற்றவர்.
ஜக்கலி கிராமத்தின் பயில்வான்களான ராமண்ணா ஹங்கி, ஷலவடி தேவப்பா, கன்யால் தேவப்பா, ஹேமண்ணா ஆகியோர் கூறியதாவது:
மல்யுத்தம் நம் நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு.
இன்றைய இளைஞர்கள், நவீனமான ஜிம்முக்கு செல்கின்றனர். பாரம்பரியமிக்க நமது கலையை பாதுகாக்கும்படி, நாங்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறோம். அவர்கள் மல்யுத்தம் கற்க வேண்டும்.
ஜக்கலி கிராமம், மூத்தவர்கள், இளைஞர்களுக்கு மல்யுத்தம் கற்றுத்தர நேரம் ஒதுக்கும், ஒரே கிராமமாகும். இது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கிராமம், 'காந்தி கிராமம்' என, பிரசித்தி பெற்றது. அதே நேரத்தில் வீர விளையாட்டுக்கும் பெயர் பெற்றதாகும். இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
எங்கள் கிராமத்தில் இவ்வளவு மல்யுத்த வீரர்கள் இருப்பது, பெருமையான விஷயமாகும்.
பல ஆண்டுகளுக்கு முன், மூகப்பஜ்ஜா பிரபலமான பயில்வானாக இருந்தார். தற்போது எந்த போட்டியில் யார் பங்கேற்றாலும், இவரது படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின், போட்டியில் பங்கேற்பது வழக்கம்.
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கானின், சுல்தான் , அமீர்கானின், தங்கல் கன்னட நடிகர் சுதீப்பின், பயில்வான் என, பல திரைப்படங்கள், மல்யுத்தத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதனால், இன்றைய தலைமுறையினர், ஆர்வத்துடன் மல்யுத்தம் கற்க வருகின்றனர்.
மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், தினமும் முளைகட்டிய பயறுடன், சோள ரொட்டி, பச்சை காய்கறிகள், நெய், பேரீச்சம் பழம், இரண்டு லிட்டர் பால் சாப்பிட வேண்டும். சிலருக்கு இவற்றை சாப்பிட வசதி இருக்காது. அப்போது, கிராமத்தினரே ஊட்டச்சத்தான உணவு வழங்கி, போட்டிக்கு தயாராக்குவர்
- நமது நிருபர் - .
இவ்வாறு அவர்கள் கூறினர்.

