ADDED : அக் 23, 2025 11:06 PM

சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று, குடகை சேர்ந்த பெண் வெண்கல பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
குடகு மாவட்டம், நாபோக்லுவின் தெக்கடா நஞ்சுண்டா - பார்வதி தம்பதியின் மூத்த மகள் தெக்கடா பவானி, 29. இவரது இளைய சகோதரி தெக்கடா சீதம்மா.
மூத்த மகள் தெக்கடா பவானி, கடந்த மாதம் தென் அமெரிக்காவின் சிலேயில் நடந்த, 'சவுத் அமெரிக்கன் கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்' என்ற பனிச்சறுக்கு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
இது தவிர, இந்தியா சார்பில் ஆசிய குளிர்கால போட்டி, நார்டிக் வேர்ல்டு சாம்பியன்ஷிப் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தேசிய ஸ்கையிங் சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா போட்டிகளில் பல பதக்கங்களை அள்ளி உள்ளார். அடுத்தாண்டு இத்தாலியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, தன்னை தயார்படுத்தி வருகிறார்.
இவர், பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டதற்கு வித்தியாசமான காரணத்தை கூறுகிறார். சிறு வயதில், 'யே ஜவானி ஹை திவானி' என்ற இந்தி திரைப்படத்தை பார்த்து உள்ளார். அதில் நடித்த கதாநாயகன், கதாநாயகி, இமயமலையில் பனி சறுக்கில் செல்லும் காட்சியை பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்ட பவானி, கல்லுாரியில் படிக்கும் போது என்.சி.சி., ஏர்விங்கில் சேர்ந்தார்.
கடந்த 2014ல் மனாலியில் நடந்த மலையேற்ற முகாமில் பங்கேற்றார். முதன் முறையாக பனி பிரதேசத்தை நேரில் கண்டார். ஸ்கையிங் மீதான இவரின் ஈர்ப்பு மேலும் அதிகரித்தது.
ஸ்கையிங் விளையாட்டு குறித்து தேடித்தேடி படித்தபோது, நார்வேயை சேர்ந்த மாரிட் ஜோர்ஜென் பற்றி தெரியவந்தது. ஸ்கையிங் வரலாற்றில் இவர் சிறந்த வீரராவார். அவரை, 'மோட்டிவேட்' ஆக எடுத்து கொண்ட பவானி, இந்தியா சார்பில் பங்கேற்க விரும்பினார்.
இப்போட்டிக்கான பயிற்சி மையங்கள் நம் நாட்டில் குறைவாக இருந்தாலும், இங்கு ஆரம்ப பயிற்சியை எடுத்த அவர், பின் நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்றார்.
'கடந்த மாதம் தென் அமெரிக்காவில் நடந்த ஸ்கையிங் போட்டியில் வெண்கலம் பரிசு பெற்றதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' என்று விவரிக்கிறார். இந்த விளையாட்டு குறித்து சிறிதும் தெரியாத தன் பெற்றோரின் ஆதரவு தான், தனக்கு பலத்தை கொடுத்ததாக கூறுகிறார்.
அடுத்தாண்டு இத்தாலியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி மீது கண்வைத்து உள்ள அவர், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். குளிர்கால போட்டிகள் குறித்து இந்திய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதற்கான உள்கட்டமைப்பை நாட்டில் உருவாக்க விரும்புகிறார். இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் பயனடைவர் என்று நம்புகிறார்.
அவர் மேலும் கூறுகையில், ''சரியான சூழ்நிலைக்காகவோ, வசதிக்காகவோ காத்திருக்க வேண்டாம். ஆர்வமும், விடாமுயற்சியும் உங்களை நீண்ட துாரம் அழைத்து செல்லும். 'கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்' போட்டி, உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலமானவர்களாக்கும்.
''இதற்கு பொறுமை, தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். தென் மாநிலத்தின் சிறிய நகரில் இருந்து வரும் என்னால் முடிகிறது என்றால், யார் வேண்டுமானாலும் செய்யலாம்,'' என்றார்.
- நமது நிருபர் -

