புத்தம் புது வீரர்களை உருவாக்க தயாராகும் கே.எஸ்.சி.ஏ.,
புத்தம் புது வீரர்களை உருவாக்க தயாராகும் கே.எஸ்.சி.ஏ.,
ADDED : ஏப் 25, 2025 05:55 AM

ஜூனியர் அளவிலான கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள், தங்கள் திறமையை வளர்த்து கொள்ளும் வகையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் சிறப்பு பயிற்சி முகாமை துவக்கி உள்ளது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ரகுராம் பட், மாநிலம் முழுதும் உள்ள பயிற்சி முகாமுக்கு சென்று, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
நேரம் கூடிவந்தது
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டே இந்த பயிற்சியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால், பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் ஆணையத்தின் தொடர் கிரிக்கெட் போட்டி நடந்து வந்ததால் துவக்க முடியவில்லை.
பயிற்சி முகாம் நடத்துவதால், ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் கண்காணிக்க முடியும். தற்போது நேரமும், காலமும் கூடியுள்ளது. மைசூரு, துமகூரு, தார்வாட், ஷிவமொக்கா, மங்களூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் ஆண்டு முழுதும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.
தனித்தனி முகாம்
மைசூரில் 'ஸ்பின்னர்'கள் எனும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை நானே, முன்னின்று கவனித்து வருகிறேன். அதுபோன்று, விக்கெட் கீப்பர், வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங் என தனித்தனியாக பயிற்சி முகாம் நடத்தப்படும்.
இம்முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று, கண்காணிப்பேன். சிறப்பாக விளையாடும் மாணவர்கள், மாணவியர் குறித்து, உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு தகவல் தெரிவிப்பேன். அவர்கள், அம்மாணவ - மாணவியரின் திறமையை மேலும் அதிகரிக்கும் வகையில் பயிற்சி அளிப்பர்.
இந்த பயிற்சி முகாம், விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களின் பணியும் கண்காணிக்கப்படுவர். ரஞ்சி கோப்பை, சையது முஷ்டாக் அலி போட்டியில் கர்நாடகா தோல்வி அடைந்தது உண்மை தான்.
ஆனால், விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளோம். அனைத்து போட்டியிலும் கர்நாடகா வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பலமான அணியை உருவாக்க காலதாமதம் ஏற்படும்.
மாணவியர் 'ஷார்ப்'
மாணவியர் கிரிக்கெட்டிற்கு கே.எஸ்.சி.ஏ., முக்கியத்துவம் அளிக்கிறது. மாணவர்களை விட, மாணவியர் சிறப்பாக விளையாடுகின்றனர். மாணவியருக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லித்தர இரண்டு மூன்று நிமிடங்களே தேவைப்படுகிறது. கற்பூரம் போன்று புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். அவர்களின் பங்களிப்பு எங்களுக்கு திருப்தியை அளித்து உள்ளது.
கர்நாடகாவில் கே.எஸ்.சி.ஏ., சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒதுக்க, அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அரசும், துமகூரில் மைதானம் கட்ட இடம் ஒதுக்கி உள்ளது. இதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இது முடிந்ததும், கட்டுமான பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

