மன வளர்ச்சி குன்றிய மகன்களுக்காக பளு துாக்கும் வீராங்கனையாக மாறிய தாய்
மன வளர்ச்சி குன்றிய மகன்களுக்காக பளு துாக்கும் வீராங்கனையாக மாறிய தாய்
ADDED : அக் 23, 2025 11:06 PM

பெங்களூரை சேர்ந்த பளுதுாக்கும் வீராங்கனை தீபா, 45, தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக மாஸ்டர் கிளாசிக் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 69 கிலோ எடை துாக்கும் பிரிவில் நான்காவது இடத்தை பிடித்தார்.
ஸ்குவாட் பிரிவில் பங்கேற்று, 162.50 கிலோ எடையை துாக்கி வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார். இத்தனைக்கும் தீபா சிறு வயதில் இருந்தே, பளுதுாக்கும் வீராங்கனை இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பளுதுாக்கும் போட்டிகளில் பங்கேற்று, தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.
தன் விளையாட்டுப் பயணம் குறித்து தீபா கூறியதாவது:
எனக்கு 45 வயது ஆகிறது. என் கணவர் அஜய், விப்ரோவில் பணியாற்றுகிறார். எங்களுக்கு ஆதித்யா, 21, ஆஷிஷ், 14, என, இரு மகன்கள் உள்ளனர். இருவருமே மனநலன் குன்றியவர்கள். மகன்களை பராமரிக்க, வங்கி வேலையை ராஜினாமா செய்தேன்.
மகன்களை சிறு வயதில் இருந்து, என் முதுகில் சுமந்து வருகிறேன். குழந்தைகளின் வயது அதிகரிக்கும்போது, எடை கூடுவது இயல்பு. என் மகன்களுக்கும் வயது ஏறிக் கொண்டே செல்வதால், அவர்களின் எடையும் கூடிவிட்டது. அவர்களை முதுகில் சுமந்து செல்லும் சக்தி எனக்கு இருக்க வேண்டும் என்பதால், எப்படி கையாள்வது என்று யோசித்தேன்.
நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, 'ஜிம்'மில் எடை துாக்க ஆரம்பித்தேன். இதுவே நாளடைவில் பளுதுாக்கும் போட்டியில் கலந்து கொள்ள என்னை ஊக்குவித்தது. 2023ல் முதல்முறையாக பெங்களூரு மாவட்ட அளவில் நடந்த, பளுதுாக்கும் போட்டியில் கலந்து கொண்டேன்.
தற்போது வரை தேசிய அளவிலான போட்டிகளில், 14 தங்க பதக்கங்கள் வென்றுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் நடந்த போட்டியில் 22 நாடுகளின் வீராங்கனையர் கலந்து கொண்டனர்.
அந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று மூன்று வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றேன். பலமான பெண் என்ற பட்டமும் கிடைத்தது. எனது மகன்களுக்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் முயற்சிகளை தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவின் பயிற்சியாளர் கவுசிக் கூறுகையில், ''பயிற்சிக்கு ஒரு நாள் கூட, தீபா விடுமுறை எடுத்தது இல்லை. மகன்களை தோளில் சுமக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ள அவர், பளுதுாக்கும் போட்டியில் இந்த நிலைக்கு வந்துள்ளார். அவருக்கு மன உறுதி, வலிமை அதிகம். தீபா போன்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்,'' என்றார்.
தீபாவின் கணவர் அஜய் கூறுகையில், ''தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக மாஸ்டர் கிளாசிக் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தீபாவின் உடல் எடை 69 கிலோ 100 கிராமாக இருந்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரோ என்ற பயம் இருந்தது.
''ஹோட்டலுக்கு சென்று சில பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து வந்து, போட்டியில் பங்கேற்றார். மகன்களை கவனித்து கொண்ட போதிலும், குறுகிய காலத்தில் பளுதுாக்கும் போட்டியில் அவர் செய்த சாதனை, எனக்கு ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்
- நமது நிருபர் - .

