நார்வே பாரா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் மைசூரு அலோக் ஜெயின் தேர்வு
நார்வே பாரா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் மைசூரு அலோக் ஜெயின் தேர்வு
ADDED : ஜூன் 04, 2026 11:03 PM

- நமது நிருபர் -:
நார்வேயின் ஓஸ்லோ நகரில், ஜூன் 12 முதல் 17 வரை நடக்கும் பாரா ஸ்போர்ட்ஸ் வோர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில், மைசூரின் அலோக் ஜெயின் தேர்வாகி உள்ளார்.
மைசூரு நகர் சித்தார்த்தா நகரை சேர்ந்தவர் அலோக் ஜெயின். பிறக்கும்போதே, உயரம் குறைவாகவும், வளர்ச்சி அடையாத கால், ஒரு கையில் முடக்குவாதம், மற்றொரு கையில் விரல்கள் இல்லாமை என, 80 சதவீதம் குறைபாடுடன் பிறந்தார்.
பல வருட உடற்பயிற்சி சிகிச்சை, விடா முயற்சி மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்னுாக்கர், பூல் விளையாட்டுகளில் தனக்கென முத்திரை பதித்தார்.
தற்போது மாநில அளவிலான ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது இடத்திலும், தேசிய அளவில் நான்காவது இடத்திலும், பாரா ஹேபால் 2025 சாம்பியன்ஷிப் போட்டியில், முதல் 10 இடங்களுக்குள்ளும் இடம் பெற்றார்.
அவர் கூறியதாவது:
ஸ்னுாக்கர் விளையாட்டு மீதான ஆர்வம், சிறு வயதில் இருந்தே இருந்தது. வீட்டில் உள்ள சிறிய டீ டேபிள் நின்று விளையாடுவேன். அதன் பின், ஸ்னுாக்கர் டேபிளில் விளையாடுவது சிரமமாக இருக்குமே என்று எண்ணினேன். ஏனெனில், நான் உயரம் குறைவாக இருப்பதால், இந்த விளையாட்டை விளையாட முடியாது என நினைத்தேன்.
ஆனால், ஸ்னுாக்கர் போட்டியில், மற்ற வீரர்கள், குணிந்து தான் பந்தை அடிக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான், டேபிளின் உயரமே இருப்பதால் எனக்கு இந்த விளையாட்டு சுலபமாக தெரிந்தது.
என் வாழ்க்கையில் என் பெற்றோர், நண்பர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். நான், என் தாயின் வயிற்றில் இருக்கும் போது, ஸ்கேன் செய்த டாக்டர்கள், என் வளர்ச்சி குறித்து கூறி, சிசுவை கலைத்துவிடலாம் என தெரிவித்தனர். ஆனால் என் பெற்றோரும், தாத்தா - பாட்டியும், 'நாங்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள், அத்தகைய பாவத்தை நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என கூறி, என்னை வளர்த்தனர்
நான், சிறு வயதில் என்ன முயற்சி செய்தாலும், தொடர்ந்து முயற்சி செய் என்று பெற்றோர், சகேதாரர், அண்ணி என அனைவரும் ஆதரவளித்தனர். இந்த விளையாட்டுக்கு ஆரம்பத்தில் எனக்கு யாரும் பயிற்சி அளிக்கவில்லை. நானாக கற்றுக் கொண்டிருந்தேன். பெங்களூரில் இதற்கான பயிற்சி அளிப்பதை அறிந்தேன். அங்கு சென்று பயிற்சி பெற்றேன்.
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில், ஜூன் 12 முதல், 17 வரை பாரா ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறேன். இப்போட்டியில், 157 மாற்றுத்திறன் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
விளையாட்டு மட்டுமின்றி, பேஷன் ஷோ கோரியோகிராபர் செய்ய விருப்பம் இருந்தது. அதிலும் பலர் அறியும் வகையில் செயல்பட்டேன். கிரிக்கெட், நடன போட்டி, நடுவராக இருந்துள்ளேன். விளையாட்டில் சோர்ந்து விடக்கூடாது. முயற்சி செய்து கொண்டே இருங்கள். முயற்சியை கைவிடாதீர்கள். ஒரு நாள் வெற்றி பெறுவீர்கள். நானும் ஆரம்பத்தில் சிரமப்பட்டு தான், இன்று இந்தளவுக்கு உயர்ந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
