விளையாட்டு அரங்கம் தாமதம் ராய்ச்சூர் வீரர்கள் வருத்தம்
விளையாட்டு அரங்கம் தாமதம் ராய்ச்சூர் வீரர்கள் வருத்தம்
ADDED : ஏப் 04, 2025 07:02 AM

ராய்ச்சூர் மாவட்டத்தின் ஹாலாபுரா அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 'நாங்கள் எங்கு சென்று விளையாட்டு பயிற்சி பெறுவது' என, கேள்வி எழுப்புகின்றனர்.
கர்நாடக அரசு, விளையாட்டு துறைக்கு, முக்கியத்துவம் அளிக்கிறது. விளையாட்டு வீரர்களை உருவாக்க ஆர்வம் காட்டுவதாக கூறிக்கொள்கிறது. ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அக்கறை காட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர்ப்பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. மாநகராட்சி சார்ந்த பொது மைதானங்கள் ஏராளம். ஆனால் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் குறைவு. கிராமங்களிலும் விளையாட்டு திறன் கொண்ட மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இவர்களின் திறமைக்கு பட்டை தீட்டி, வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் விளையாட்டு அரங்கங்கள், பயிற்சியாளர்கள் இல்லை என்பது வருத்தமான விஷயமாகும்.
விளையாட்டு துறையில் ஆர்வம், திறமை இருந்தும் வெளிச்சத்துக்கு வர முடியாமல், பலர் குடத்தில் இட்ட விளக்காய் ஒளி வீச முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளித்தால், சர்வதேச அளவில் ஜொலிப்பது, பெரிய விஷயமே அல்ல. இதில் அரசுக்கு அக்கறை இருக்க வேண்டும்.
ராய்ச்சூர் மாவட்டம், கவிதாளா அருகில் உள்ள ஹாலாபுரா அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், 2021 - 22ல் விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும், பணிகள் முடியவில்லை. சிறார்களால் விளையாட முடியவில்லை.
ரன்னிங் டிராக், கபடி கோர்ட், கோகோ கோர்ட், வாலிபால் மற்றும் த்ரோ பால் கோர்ட் அமைக்கும் பணிகள் பாக்கியுள்ளன.
பணிகளும் தரமாக இல்லை என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். பணிகளுக்காக சிமென்ட் கலவை, மணல், கற்களை கொட்டியுள்ளதால், மாணவர்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.
இவர்களை கண்டித்து, பணிகளை விரைந்து முடிக்கும்படி எச்சரிக்க, மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனம் இல்லை.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, நிதி பற்றாக்குறையால் பணிகள் நின்றுள்ளது. விரைவில் நிதியை வழங்கி பணிகளை முடிக்க உதவும்படி, மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். - நமது நிருபர் -

