ADDED : ஜூலை 10, 2025 11:16 PM
தண்ணீர் சம்பந்தமான விளையாட்டுகளை அனைத்து மாவட்டங்களிலும் ஊக்குவிக்கும் வகையில், பயிற்சி மையங்கள், தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என தடகள வீரர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கர்நாடகாவில் தண்ணீரில் விளையாடும் போட்டிங், சர்பிங், கயாகிங் போன்ற பல வகை போட்டிகளில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகின்றனர். இதன் காரணமாக, கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இரண்டும் இணைந்து 10 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பல வகையான தண்ணீர் போட்டிகளில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
பெங்களூரில் கே.ஆர்., புரத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., ஏரியில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், பல மாவட்டங்களில் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், அரசு ஒழுங்காக நிதி அளிக்காதது, போதுமான உபகரணங்கள் இல்லாததே என கூறப்படுகிறது.
அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளாவில் போன்றவற்றில் தண்ணீர் சம்மந்தமான போட்டிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கர்நாடகாவில் கொடுக்கப்படுவதில்லை வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் வீரர்கள் குறை கூறுகின்றனர்.
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிரத்யேகமாக பயிற்சி மையம் அமைக்கப்பட்டால், பலரும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், தண்ணீர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பயிற்சி மையங்கள், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் தடகள வீரர்கள் கூறிவருகின்றனர்.
கர்நாடகாவில் தண்ணீர் சம்பந்தமான தடகள வீரர்கள் பெங்களூரு, மைசூரிலே அதிகம் உள்ளனர். இந்நிலை மாற அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள், விடுதிகள் அமைக்க வேண்டும் என தடகள வீரர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
- நமது நிருபர் -