ADDED : மே 23, 2025 05:41 AM

ஸ்கேட்டிங் விளையாடுவது பல நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக தசைகளை வலுப்படுத்துகிறது. இதயத்தை மேம்படுத்துதல் மற்றும் உடலை சமநிலையாக வைக்க உதவுகிறது. கலோரிகளை எரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
ஸ்கேட்டிங் வீரர்கள் காலில் ஸ்கேட்டிங் ஷூ அணிந்து சாகசத்தில் ஈடுபடுவதை பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும். வார இறுதி நாட்களில் பெங்களூரு கப்பன் பார்க் பகுதிக்கு சென்று பார்த்தால், இளம் தலைமுறையினர் ஸ்கேட்டிங் செய்வதை கண்டு ரசிக்கலாம்.
ஸ்கேட்டிங் விளையாட்டில் அசத்தியவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் பெங்களூரில் தனுஷ் பாபுவும், 30, ஒருவர். 4 வயது சிறுவனாக இருந்த போது தனுஷ் பாபுவுக்கு ஸ்கேட்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பகால ஸ்கேட்டிங் பயிற்சியை தந்தை பாலாஜி பாபுவிடம் பெற்றார். பள்ளி அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சர்வதேச, தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று இதுவரை 14 தங்கம், 10 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார். ஸ்கேட்டிங்கில் கிரவுன் கிங் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக கர்நாடக அரசு கடந்த 2018ம் ஆண்டு, தனுஷ் பாபுவுக்கு கர்நாடக கிரீட ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. ஸ்கேட்டிங் விளையாடி கொண்டே, சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
தனுஷ் பாபுவின் ஸ்கேட்டிங் பயணம் குறித்து அவரது தாய் சுதா கூறியதாவது:
தனுசுக்கு 3 வயது இருக்கும் போது பறவை போன்று இறக்கையை பிரித்து பறக்க ஆசைப்பட்டார். ஒரு நாள் நாங்கள் கன்டீரவா விளையாட்டு மைதானம் வழியாக சென்றபோது, அங்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களை பார்த்து தனுஷ் வியப்படைந்தார். ஸ்கேட்டிங் விளையாடினால் பறவையைப் போல பறக்க முடியும் என்று எங்களிடம் கூறினார்.
அந்த விளையாட்டின் மீது அவருக்குஏற்பட்ட ஆர்வத்தால் அவரை உடனடியாக பயிற்சிக்கு சேர்த்து விட்டோம். ஸ்கேட்டிங் விளையாட்டில் வலது கால்தான் உடலை முன்னோக்கி தள்ளும்.ஆனால், தனுசுக்கு இடது கால் வலுவாக இருந்தது. இதனால் அவருக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இல்லை.
ஆனாலும் என் கணவர், மகனுக்கு விதான் சவுதா சாலை முன் நிறைய பயிற்சி அளித்தார். ஸ்கேட்டிங் பயிற்சி பற்றி நிறைய புத்தகங்களில் படித்தோம். தற்போது அவர் விளையாட்டில் உலக அளவில் சாதனை படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் --