ADDED : ஜன 23, 2026 05:58 AM

- நமது நிருபர் -
கோலார் மாவட்டத்தில், தரமான நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்பது, நீச்சல் வீரர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இப்போது அந்த வேண்டுகோளை நிறைவேற்ற, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை முன் வந்துள்ளது.
கோலார் மாவட்டத்தின், ஒவ்வொரு தாலுகாவிலும் நீச்சலில் திறன் மிக்கவர்கள் உள்ளனர். ஆனால் சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், அவர்களால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
கோலார் மாவட்டத்தில் அரசு சார்ந்த ஒரே ஒரு நீச்சல் குளம் கூட இல்லை.
தனியார் நீச்சல் குளங்களில் அதிகமான கட்டணம் செலுத்தி பயிற்சி பெற, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களால் முடிவதில்லை.
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும், பயிற்சிக்காக பெங்களூரு நகரையே நம்ப வேண்டியுள்ளது.
சில ரிசார்ட்டுகள், தனியார் பள்ளிகளில் நீச்சல் குளங்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெற, விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி கிடைப்பது இல்லை .
எனவே அரசு சார்ந்த நீச்சல்குளம் அமைக்கும்படி, பல ஆண்டுகளாக மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இப்போது இவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, இளைஞர் நலம், விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது.
கோலார் நகரின், மினி விளையாட்டு அரங்கின் பின் பகுதியில் உள்ள இடத்தில், நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது.
கடந்த வாரம் அடிக்கல் நாட்டப்பட்டது. 25 மீட்டர் நீளமான நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. உள் அரங்கம் போன்று மேற்கூரையுடன் நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது.
விளையாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீச்சல் குளம் அமைக்கப்பட்டால், நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற உதவியாக இருக்கும். மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தலாம். புதிதாக பயிற்சி செய்ய ஆர்வமாக பலரும் முன்வருவர்.
கோலார் மாவட்டத்தில், சிறார்கள் பலருக்கு நீச்சலில் ஆர்வம் உள்ளது. எனவே தாலுகா அளவில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி இப்போது கோலார் நகரில், நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. நீச்சல் பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

