ஆர்.சி.பி., பெண்கள் அணியின் பயிற்சியாளராக தமிழர் நியமனம்
ஆர்.சி.பி., பெண்கள் அணியின் பயிற்சியாளராக தமிழர் நியமனம்
ADDED : நவ 07, 2025 05:40 AM

ஆர்.சி.பி., பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளராக, தமிழகத்தை சேர்ந்த மலோலன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளாக ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கடந்த 2022 முதல் பெண்கள் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024 ல் நடந்த போட்டியில், ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கோப்பையை வென்றது. நடப்பாண்டு நடந்த போட்டியில், லீக் சுற்றிலேயே ஆர்.சி.பி., அணி வெளியேறியது.
இவ்விரண்டு ஆண்டுகளும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லுாக் வில்லியம்ஸ், அணியின் பயிற்சியாளராக இருந்தார். 'பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்' அணியுடன் லுாக் வில்லியம் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால், ஆர்.சி.பி.,யின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.சி.பி., அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கை:
பெண்கள் பிரீமியர் லீக் துவக்க காலத்தில் இருந்து ஆர்.சி.பி.,யின் ஒரு பகுதியாக மலோலன் ரங்கராஜன் இருந்து வருகிறார். 2024ல் அணி சாம்பியன் பட்டம் பெற்ற போது, அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தார்.
எங்கள் அணியின் துணை ஊழியர்களின் முக்கிய உறுப்பினராக இருந்து வரும் மலோலன் ரங்கராஜன், அடுத்தாண்டு நடக்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில், ஆர்.சி.பி., அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, மலோலன் ரங்கராஜன் கூறியதாவது:
பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. 2024ல் ஆர்.சி.பி., பெண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற வழிவகுத்த லுாக்கின் பங்களிப்பும், தாக்கமும் பாராட்டக்குரியது.
அடுத்தாண்டு விளையாட்டுக்கான ஏலம், சவாலாக இருக்கும். அணியின் அடுத்த கட்டத்தை வடிவமைக்க எங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஸ்மிருதியுடன் பயிற்சியாளராகவும், துணை ஊழியர்களுடன் சிறந்த பணி உறவை வளர்த்து கொண்டு உள்ளேன். ஆர்.சி.பி., ரசிகர்கள் விரும்பும் வகையில் வெற்றி பெற்றுத்தர முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .

