ADDED : ஜூன் 25, 2026 10:41 PM

- நமது நிருபர் -:
விளையாட்டு துறைக்கு என தனி அமைச்சர் கிடைத்து இருப்பதால், கர்நாடக விளையாட்டு வீரர், வீராங்கனையர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில், பழங்குடியினர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், நாகேந்திரா தனது பதவியை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் அவரிடம் இருந்த துறைகள், சித்தராமையா வசம் சென்றன.
ஏற்கனவே அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளையும் அவர் நிர்வகித்து வந்ததாலும், நிதி துறை மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால் விளையாட்டு துறையை சித்தராமையா கண்டுகொள்ளவில்லை. முழுக்க, முழுக்க அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் அந்த துறை இருந்தது. அதிகாரிகளும் சரியாக பணி செய்யாததால் விளையாட்டு வீரர் - வீராங்கனையர் அதிருப்தி அடைந்தனர்.
போராட்டம் மோசமான நிலையில் உள்ள மைதானங்கள் சீரமைக்கப்படவில்லை; தங்களுக்கு வேண்டிய உதவி அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
சில இடங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனையர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், விளையாட்டில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக கூறினர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி புதிய முதல்வராக சிவகுமார் பொறுப்பேற்றார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பரமேஸ்வருக்கு வருவாய் மற்றும் விளையாட்டு துறைகள் ஒதுக்கப்பட்டன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின், விளையாட்டு துறைக்கு என தனி அமைச்சர் கிடைத்ததால், வீரர், வீராங்கனையர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதிலும், விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட பரமேஸ்வர், விளையாட்டு துறை அமைச்சராக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, மைதானங்கள் சீரமைக்கப்படும்; அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தன் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், விளையாட்டு துறையில் பல முன்னெடுப்புகளை பரமேஸ்வரும் செய்து வருகிறார்.
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த வாய்ப்பு வழங்க சிறப்பு விளையாட்டு திட்டங்களை வகுப்பது; கிராம பஞ்சாயத்தில் வசூலிக்கப்படும் வரியில், 2 சதவீதத்தை விளையாட்டு மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும் என்றும் அவர் உத்தர விட்டுள்ளார்.
