குட்டி மல்யுத்த வீரர்களை உருவாக்கும் பயிற்சி மை யம்
குட்டி மல்யுத்த வீரர்களை உருவாக்கும் பயிற்சி மை யம்
ADDED : டிச 19, 2025 05:03 AM

கொப்பால் மாவட்டத்தில்: கொப்பால் மல்யுத்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற வீரர்கள், பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றனர். நாளடைவில் ஒவ்வொரு பயிற்சி மையமாக மூடப்பட்டது. அதனால், மல்யுத்தத்தில் ஆர்வம் உள்ளவர்களால், பயிற்சி பெற முடியவில்லை.
கொப்பால் நகரின் மிட்டிகேரியில் இருந்த மல்யுத்த பயிற்சி மையத்தை புதுப்பிக்க, கொப்பால் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்த பயிற்சி மையம் விளையாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பயிற்சி மையத்தை மேம்படுத்தி, புதிதாக மண் போடப்பட்டுள்ளது. சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. பெயின்ட் அடிக்கப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு தேவையான சாதனங்களும் வைக்கப்பட்டுளன்ளன.
தற்போது தினமும், மாலை நேரத்தில் சிறுவர்கள் பயிற்சி பெற வருகின்றனர். இவர்களுக்கு அனுபவம் மிக்க பயில்வான்களான லிங்கப்பா மூலிமனி, லட்சுமப்பா பங்கல், சாதிக் அலி தபேதார் உட்பட சிலர் மல்யுத்த பயிற்சி அளிக்கின்றனர்.
லிங்கப்பாவும், லட்சுமப்பாவும் கர்நாடகாவில் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று, விருதுகளை பெற்றவர்கள். இவர்களே போட்டிகளை ஏற்பாடும் செய்கின்றனர். இப்போது தங்களின் அனுபவத்தை, சிறார்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்துகின்றனர்.
விளையாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொப்பால் நகரின் கோட்டை சாலையில் உள்ள மிட்டிகேரியின் மல்யுத்த பயிற்சி மையம், எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சீரமைக்கப்பட்டு உள்ளது.
இப்போது. சிறார்கள் அன்றாடம் பயிற்சிக்கு வருகின்றனர். இன்றைய சிறார்கள் தினமும் பள்ளிப்பாடம், விளையாட்டு, மொபைல் கேம்ஸ் என, பரபரப்பான வாழ்க்கையில் உள்ளவர்கள். இவர்களுக்கு நம் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்யுத்தம் பயிற்சி அளிப்பது சவாலான விஷயமாகும்.
மிட்டிகேரியில் உள்ள பயிற்சி மையத்தின் மாடியில், ஒரு அறை உள்ளது. அங்கு தங்கி சிறார்களுக்கு பயிற்சியளிக்க நிரந்தர பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். அவ்வப்போது போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். கோடை விடுமுறை நாட்களில், மல்யுத்த போட்டிகள் நடத்தப்படும்.
கொப்பால் மாவட்டத்தில் பழமையான பயிற்சி மையங்கள் உள்ளன. அவைகளையும் சீரமைத்தால், கொப்பாலுக்கு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த பெருமை திரும்ப கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, இளைஞர்கள், சிறார்கள் தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவர். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மல்யுத்த பயிற்சி உதவும். மல்யுத்தம் கற்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து, சிறார்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இதை கற்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -:

