பி.சி.சி.ஐ., கள நடுவர்களாக கர்நாடகாவின் இருவர் தேர்வு
பி.சி.சி.ஐ., கள நடுவர்களாக கர்நாடகாவின் இருவர் தேர்வு
ADDED : ஜூலை 10, 2025 11:13 PM

கிரிக்கெட் போட்டியில் கள நடுவர் பணி என்பது மிகவும் முக்கியமானது. விதிகள் படி வீரர்கள் விளையாடுகின்றனரா என்பதை கண்காணித்து ஆட்டத்தை ஒருங்கிணைப்பது முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது.
போட்டியின் போது ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பது; வீரர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவர்களின் முக்கிய பணியாக உள்ளது. ஒரு ஆட்டத்தின் முடிவை தனது ஒற்றை விரலால் மாற்றும் அதிகாரமும் கள நடுவர்களிடம் உள்ளது.
பெருமை
பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கள நடுவர்களாக பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தற்போது பி.சி.சி.ஐ., கள நடுவர்களாக கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீநாத் குல்கர்னி, சந்தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதிக கவனம்
இதுகுறித்து ஸ்ரீநாத் குல்கர்னி கூறியதாவது:
எனது சொந்த ஊர் ஹூப்பள்ளி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்து இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இதனால் ஹூப்பள்ளியில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்தேன்.
இன்ஜினியரிங் படித்தபின் கிரிக்கெட்டில் என்னால் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் வேலைக்கு சென்றபடியே கிளப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். நிறைய போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளேன்.
மூன்றாவது முயற்சி
இதனால் கடந்த 2014 ல் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நடுவராக தேர்வு ஆனேன். கர்நாடகாவில் நடக்கும் ரஞ்சி, உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் நடுவராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
கடந்த 2014, 2019 ல் பி.சி.சி.ஐ., நடுவர் பணிக்கு தேர்வு எழுதினேன். ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த ஜூன் மாதம் ஆமதாபாத்தில் நடந்த தேர்வை மூன்றாவது முயற்சியாக எழுதினேன். இந்த தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அம்பயர் பணி கிடைத்துள்ளது.
நடுவர் பணியாற்ற ஆர்வம் அதிகம் இருக்க வேண்டும். இந்தப் பணி எளிதானது இல்லை. நாள் முழுவதும் வெயிலில் நிற்க வேண்டும். மன உறுதி, உடல் வலிமை அவசியம். நடுவர் பணிக்கு கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கிரிக்கெட் விதிகளை தெரிந்து கொண்டால் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல இன்னொரு நடுவர் சந்தீப் ஷிவமொக்காவை சேர்ந்தவர். கிளப் பணிகளுக்காக விளையாடிய இவரும், கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷனில் நடுவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்
-- நமது நிருபர் --.