இந்திய கிரிக்கெட் அணியில் கவுசிக்கிற்கு இடம் கிடைக்குமா?
இந்திய கிரிக்கெட் அணியில் கவுசிக்கிற்கு இடம் கிடைக்குமா?
ADDED : ஜன 23, 2026 05:58 AM

- நமது நிருபர் -
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் இடமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த போட்டிகள் மீதான தாக்கத்தால் ராஞ்சி, முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்து உள்ளது.
இதனால் இங்கு திறமையான விளையாடும் வீரர்களை, அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்தர போட்டிகளில் பல ஆண்டுகளாக ஜொலித்து வரும் கர்நாடகா வீரர் வி.கவுசிக், 33, என்பவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
வலது கை வேகபந்து வீச்சாளரான பெங்களூரின் கவுசிக், போட்டியின் போது பிட்ச்சின் இரு முனையில் இருந்தும், பந்தை ஸ்விங் செய்து வீசுவதில் கில்லாடி. தற்போது இந்திய அணியில் விளையாடும் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களை, முதல்தர போட்டியின் போது தனது அபார பந்துவீச்சின் மூலம் கதற விட்டவர் தான் கவுசிக்.
பிட்ச் தன்மை எப்படி இருந்தாலும் சரி; எந்த சூழ்நிலையிலும் பந்து வீச தயாராகவே இருப்பார். கர்நாடக அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடும் அவர், கர்நாடக அணி இரண்டு முறை சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி உள்ளார்.
சிறப்பாக விளையாடினாலும் கூட அவரை ஏலத்தில் எடுக்க, எந்த ஐ.பி.எல்., அணியும் முன்வரவில்லை என்பது சோகம். ஆனால், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், முதல்தர போட்டிகளில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். ஒரு நாளில் தொடர்ந்து 25 முதல் 30 ஓவர்கள் பந்துவீசும் திறனும் அவரிடம் உள்ளது.
கடந்த 2019 முதல் தற்போது வரை 50 முதல்தர போட்டிகளில் விளையாடிய அவர் 2,526 பந்துகள் வீசி 1,579 ரன்கள் கொடுத்து 96 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உள்ளார். ஐ.பி.எல்.,லில் விளையாட எந்த அணியும் தன்னை ஏலத்தில் எடுக்காவிட்டாலும், நிச்சயம் ஒரு நாள் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
கவுசிக்கிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று, அவரது பயிற்சியாளர்கள், நண்பர்கள் ஆர்வமாக உள்ளனர். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வெளியே தெரியாமல் போன வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் வரிசையில் கவுசிக்கும் இணைந்து விட கூடாது என்பதே, கர்நாடக கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

