ADDED : அக் 23, 2025 11:05 PM

மைசூரு உட்பட கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களில், மல்யுத்த பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தால், இந்த வீரக்கலை நலிவடைந்து வருகிறது. இதனால் மல்யுத்த பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மைசூரு மல்யுத்தத்தின் தாயகம். ஆரம்ப நாட்களில் இருந்தே, பிரபலமான விளையாட்டாக வளர்ந்து வந்துள்ளது. ஒரு காலத்தில் மைசூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த பயிற்சி மையங்கள் இருந்தன. இங்குள்ள பயிற்சியாளர்கள், தங்களிடம் பயிற்சி பெற வருவோரை, சொந்த பிள்ளைகளை போன்று கருதி, மல்யுத்த பயிற்சி அளிப்பர். அவர்களுக்கு தங்கள் சொந்த செலவில் உணவளிப்பர். ஏழைகளாக இருந்தால் பண உதவியும் செய்வர்.
ஆனால் இப்போது, சில பயிற்சி மையங்கள் மட்டுமே, மல்யுத்த பயிற்சி அளிக்கின்றன. மைசூரில் இப்போதும் மல்யுத்த பிரியர்கள் பெருமளவில் உள்ளனர்.
இங்கு மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் நடந்தால், மைசூரில் இருந்தே 2,500க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் பங்கேற்பர். மாண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன், மங்களூரு, உடுப்பி மாவட்டங்களில் இருந்து 6,000 வீரர்கள் வருவர்.
இம்முறை மைசூரு தசராவில் நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்க, மைசூரில் இருந்து 100க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் பங்கேற்றனர். இவ்வளவு பிரபலமாக இருந்தும், மைசூரு உட்பட ஏழு மாவட்டங்களில் விளையாட்டு துறை சார்ந்த ஒரு மல்யுத்த பயிற்சியாளர் கூட இல்லை. பயிற்சி மையமும் இல்லை என்பதால், மல்யுத்த வீரர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மல்யுத்த போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்தும் வகையில், பெங்களூரு ரூரல், பெங்களூரு நகர், பெலகாவி, கலபுரகி, மைசூரு என, ஐந்து மண்டலங்களாக விளையாட்டு துறை பிரித்துள்ளது. இவற்றில் பெலகாவி, பாகல்கோட், கார்வார், தார்வாட், கதக், ஹாவேரி அடங்கிய பெலகாவி மண்டலத்தில் மட்டுமே, மல்யுத்த விளையாட்டு நிலையம், பயிற்சி மையங்கள் உள்ளன. ஷிவமொக்கா, தாவணகெரே மாவட்டங்கள் அடங்கிய பெங்களூரு ரூரல் மண்டலத்தில் இத்தகைய வசதிகள் உள்ளன. மைசூரு உட்பட மற்ற மண்டலங்களில், ஒரு பயிற்சி மையம் கூட இல்லை.
இதன் விளைவாக, தசராவை தவிர மற்ற நாட்களில், மல்யுத்த போட்டிகள் ஏற்பாடு செய்ய முடிவதில்லை. பயிற்சியும் நடப்பது இல்லை. மல்யுத்த திறன் கொண்டவர்கள் இருந்தாலும், சரியான பயிற்சி இல்லாததால், குடத்திலிட்ட விளக்காக உள்ளனர். முதல்வர் சித்தராமையாவுக்கு மல்யுத்தம் என்றால் மிகவும் விருப்பம். விளையாட்டு துறையும் அவரிடமே இருப்பதால், விளையாட்டுக்கு 2 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளார்.
எனவே முதல்வர், மாவட்டந்தோறும் மல்யுத்த பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தம் மறைந்து போகும் என, அஞ்சப்படுகிறது. 'கடந்த முறை பட்ஜெட்டில், மைசூரில் மல்யுத்த அகாடமி அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகளை துவக்கவில்லை. முறையான பயிற்சி இன்றி, மல்யுத்த போட்டியில் களமிறங்கும் இளைஞர்கள், எலும்பு முறிவு போன்ற பிரச்னைகளில் சிக்குகின்றனர். பயிற்சியாளர், உபகரணங்கள் இல்லையென்றால், தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை செய்ய முடியாது.
உடனடியாக மல்யுத்த பயிற்சி நிலையம் துவக்கி பயிற்சியளித்து, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்' என, மல்யுத்த ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நமது நிருபர் -

