ADDED : மார் 01, 2025 05:41 AM

இன்றைய காலத்தில் பிரியாணினா யாருக்குத் தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு என்றால், அது பிரியாணி தான்.
பிரியாணியே சாப்பிடுவதே ஒரு பேஷனாக ஆகிவிட்டது. அது போல பிரியாணியை எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்ற அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது. இதற்கு இரவு பிரியாணி, 'மிட் நைட்' பிரியாணி என பல பெயர்களை வைத்து, லைக் பண்ணியும், சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை வாங்குவதற்கும் இப்படி சாப்பிடுகின்றனர்.
பிரியாணியில் பல வகைகள் உள்ளன. இருப்பினும், சிக்கன் பிரியாணி, ஆடு பிரியாணி, முட்டை பிரியாணி உள்ளிட்டவை பிரபலமானவை. அரபு நாடுகளில் ஒட்டக பிரியாணியை, பெரிய அளவிலான தட்டில் வைத்தும் சாப்பிடுகின்றனர். இதை பார்க்கும் போதே ஒட்டக பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் வரத்தான் செய்கிறது. இப்படி, இந்த பிரியாணிக்கு உலகம் முழுக்க ரசிகர் பட்டாளம் உள்ளது.
இப்படி பல வகை பிரியாணிகள் இருந்தாலும், இது ஒரு புது வகை பிரியாணியாக இருக்கும். இந்த பெயரை கூட நீங்கள் இதுவரை கேட்டு இருக்க மாட்டீர்கள். அது தான் கத்திரிக்காய் பிரியாணி.
இதை படித்தவுடன், என்னது கத்திரிக்காய் பிரயாணியா என, உங்கள் முகம், ஒரு பக்கமாய் திரும்பும். ஆனால், நீங்கள் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள். பின் மறுமுறை உங்களை அறியாமலே அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்.
செய்முறை
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளவும். அதில் நெய், எண்ணெயை ஊற்றவும். பட்டை கிராம்பு ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை என அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதில் பெரிய வெங்காயத்தின் சீவல்களை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதில் நறுக்கி வைத்த தக்காளி, புதினா கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
இப்போது, கதையின் நாயகனான கத்திரிக்காயை, நான்கு துண்டுகளாக நீள வாக்கில் வெட்டப்பட்ட கத்திரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து; பாஸ்மதி அரிசியை போடவும். அவ்வளவு தான், வேலை முடிஞ்சிடுச்சு.
ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும், பிறகு கத்திரிக்காய் பிரியாணியை பீங்கான் பிளேட்டில் போட்டு சாப்பிட்டால்; அறுசுவையும் உங்கள் நாவில் நாட்டியமாடும்
- நமது நிருபர்-.