ADDED : பிப் 14, 2025 11:08 PM

ஆந்திரா உணவு என்றால், அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது, 'காரம்' தான். அவ்வளவு காரமாக, உணவு வகைகளை சாப்பிடுவர். அதே ஆந்திராவில் பாரம்பரியமான இனிப்பு வகையான, 'பூத்தரேக்கலு' செய்கின்றனர். இதை பார்ப்பதற்கு பேப்பரை சுற்றி வைத்தது போன்று இருக்கும். வீட்டில் உள்ள 'சுட்டீஸ்கள்' விரும்பி சாப்பிடுவர்.
செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் பச்சரிசியை நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளவும். பின், தண்ணீர் ஊற்றி, ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பச்சரிசியை, முதலில் மிக்சியில் நைசாக மாவு பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.
மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின், மாவில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் பதத்தில் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு கப் சர்க்கரை, இரண்டு ஏலக்காய், ஏற்கனவே நறுக்கி வைத்திருந்த முந்திரி, பாதாம், பிஸ்தாவையும் மிக்சியில் போட்டு பவுடர் போன்று அரைத்து கொள்ளவும்.
தண்ணீர் பதத்தில் இருக்கும் மாவை, ஆப்பச்சட்டியில் ஒரு கரண்டி ஊற்றி, ஆப்பம் தயாரிப்பது போன்று, சட்டியின் ஓரங்களில் மாவு வரும் வகையில் சுற்ற வேண்டும். இந்த மாவு 'மொறுமொறு' என்று வரும் வரை காத்திருங்கள்.
அதன் மீது சிறிதளவு நெய் ஊற்றி, அதன் மீது பவுடர் போன்று அரைத்து வைத்திருந்த சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, பாதாம், பிஸ்தாவை ஒரு ஸ்பூன் துாவ வேண்டும்.
பின், அதை காகித்தை சுற்றுவது போன்று சுற்றினால், ஆந்திரா ஸ்டைல் பூத்தரேக்கலு ரெடி
- நமது நிருபர் -.