ADDED : மார் 22, 2025 05:50 AM

ஒவ்வொரு மாநில உணவுக்கும் தனி ருசி, அங்கீகாரம் உண்டு. குறிப்பாக வட மாநில உணவுகளை விட, தென் மாநில உணவுகள் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். வெளிநாட்டினர் கூட, இந்தியாவின் தென்மாநில உணவுகளை விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக ஆந்திரா என்றாலே காரமான உணவுக்கு பெயர் பெற்றது.
ஆனால் சுவையும் வேற லெவலாக இருக்கும். அங்கு அவரைக்காயை வைத்து உள்ளி காரம் செய்கின்றனர். பொதுவாக அவரைக்காயை வைத்து பொரியல், கூட்டு, சாம்பார் வைத்து இருப்போம். அது என்ன, 'உள்ளி காரம்' என்று தோன்றும். அதன் செயல்முறை என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின், தனியா, சீரகம், காஷ்மீர் மிளகாய், காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.
அதனுடன் பூண்டு பற்கள் சேர்த்து, நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய நாட்டு அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த விழுதுடன், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வெந்த பின் கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, நெய் சேர்த்து இறக்கினால் சுவையான, காரமான அவரைக்காய் உள்ளி காரம் தயார்.
சாம்பார், புளி, முட்டை, தயிர் சாதங்களுக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடுவதற்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். காரசாரமாக சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.
- நமது நிருபர் -