ADDED : ஏப் 12, 2025 02:41 AM

ஆன்மிக விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் மரியாதைக்கு உரிய அடையாளமாக, வெற்றிலை வைக்கப்படுகிறது. இந்த வெற்றிலை சுப காரியங்கள் மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகவும் உள்ளது.
வெற்றிலையை மெல்லுவதால் ஈறுகளில் இருக்கும் வலி, ரத்த கசிவு நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலையில் ஈறுகளை தயார் செய்கிறது. மேலும், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தி ஆரோக்கியம் தரும் வெற்றிலையில், இந்த வாரம் துவையல் செய்யலாம்.
செய்முறை
முதலில் வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதில் உள்ள காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடலை பருப்பு, கொத்துமல்லி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வறுத்தவைகளை ஆற வைத்த பின், மிக்சியில் போட்டு, பொடியாக அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். நறுக்கிய தக்காளி, புளி சேர்த்து அடுப்பை 'சிம்'மில் வைத்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் துாள், பெருங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை சேர்க்கவும். ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கிளறுங்கள்.
வெற்றிலையின் பச்சை வாசனை நீங்கி, நன்றாக வதங்கியதும், அதை மிக்சி ஜாரில் போட்டு, பொடியாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
கடைசியாக கடுகு, உளுந்தம் பருப்பை எண்ணெயில் தாளித்து, கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்த்தால், வெற்றிலை துவையல் ரெடி
- நமது நிருபர் -.

