ADDED : பிப் 08, 2025 06:37 AM

சிக்கன் பிரைடு ரைஸ், முட்டை பிரைடு ரைஸ், வெஜ் பிரைடு ரைஸ் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால், பிஷ் பிரைடு ரைஸ் சாப்பிட்டு இருக்கீங்களா. கேட்பதற்கே வித்தியாசமாக இருக்குள்ள. இந்த கட்டுரையும் சற்று வித்தியாசமானது தான்.
பொதுவாக வீட்டில் இருக்கும் குட்டீஸ்கள் வித்தியாசமாக உணவை விரும்பி சாப்பிடுவர். இதனாலே பெரும்பாலும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு ஹோட்டலுக்கு சென்று துரித உணவு வாங்கி கொடுக்காமல், வீட்டிலே சற்று வித்தியாசமாக சத்தான உணவை செய்து கொடுக்கலாம்.
மீனை வைத்து மீன் குழம்பு வைத்தது போதும்; மீனை வைத்து 'பிஷ் பிரைடு ரைஸ்' செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை தரமாகவும், அறுசுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாறை மீன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகு துாள் - 1 டீஸ்பூன்
முட்டைகோஸ் - சிறிதளவு
கேரட் - 1
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மீன் மசாலா - 3 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பாஸ்மதி சாதம் - 2 கப்
செய்வது எப்படி?
முதலில், இரண்டு பெரிய அளவிலான பாறை மீனை எடுத்து, அதை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதில், மீன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு தடவி அரைம-ணி நேரம் ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை தோசை கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்றாக பொரிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு பெரிய வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் மீன் துண்டுகள், நறுக்கப்பட்ட வெங்காயம், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். அனைத்தும் பாதியளவு வெந்த பின், வடித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்மதி சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக மிளகுத்துாளை லேசாக துாவி, அப்படியும், இப்படியுமாக ஒரு கிண்டு கிண்டி வாணலியை இறக்கினால் 'பிஷ் பிரைட் ரைஸ்' ரெடி. - நமது நிருபர் -